பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.கொல்லும் சொல்

17"பெற்றவர்கள் பிள்ளைகளின் குறைகளையும், உற்றவர்கள் நண்பர்களின் குறைகளையும் எடுத்துக் கூறாமல் இருக்கலாமா? இருந்தால் அவர்கள் திருந்துவது எப்படி?" என்று நாம் வள்ளுவரைக் கேட்டால், அவர் "நன்றாக எடுத்துக் கூறுங்கள்; மக்களின் குறைகளை எடுத்துக் கூறித் திருத்தித் தம்மின் தம் மக்களை அறிவுடையவர்களாகச் செய்யுங்கள். அதுதான் தந்தையின் கடன். நண்பர்களின் தவறை அழ அழச் சொல்லி மட்டுமல்ல; இடித்து இடித்துக் கூறுங்கள், அதுதான் நட்பு. நான் கூறவந்தது அவர்களையல்ல; உற்றாரும் நண்பரும் அல்லாத பிறரை" என்று வெகு நயமாகக் கூறுகிறார். இவ்வுண்மையை இக்குறளில் உள்ள "பிறர்" என்ற சொல் வெகு அழகாக நமக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறது.

தீமை என்ற சொல் இக் குறளில் ஆட்சி புரிகிறது. அதற்குத் தவறு என்பதோ, குறை என்பதோ பொருளாகாது. இது, பழி பாவங்களுக்கு அஞ்சாத கொடுஞ்செயல் என்றே பொருள் பெறும். வள்ளுவர் இதனைக் கருத்திற் கொண்டே, 'பிறர் குறையை' 'பிறர் தவறை' என்று கூறாமல், 'பிறர் தீமையை' என்று அழுத்திக் கூறியிருக்கிறார் எனத் தெரிகிறது.

ஒருவருடைய தீமைகளை அவரது நலம் கருதுவோர் அவரிடமே நேரிற் சென்று எடுத்துக் கூறியும்கூடத் திருத்தலாம் என்பது வள்ளுவருடைய கருத்து. இதனைக் 'கண்ணின்று கண்ணறச் சொல்லினும்' என்ற குறட் சொல்லே மெய்ப்பிக்கும். இக்குறளில் கூறியிருப்பது அது வல்ல என்றும், பிறருடைய தீமைகளைப் பிறரிடத்தே போய்க் கூறும் கொடுமையினையே என்றும் தெளிவாக அறியலாம்.

ஒருவருடைய தீமைகளைப் பிறரிடம் கூறாமல் அவரிடமே சென்று கூறுவது குளிர்ச்சி உள்ளங் கொண்டவர்கள் செயலாகுமே ஒழிய, எரிச்சல் உள்ளங் கொண்ட மக்களின் செயலாகாது என்பதை எண்ணியே, வள்ளுவர் அவ்வாறு சொல்லியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

தி.—2