பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49


வீரன் போர்க்களம் புகுந்தான். அவனுக்கு வேல் படைக்கருவியாக இருந்தது. பகைவனது யானை ஒன்று அவனைக் கொல்ல வந்தது. அதன்மீது குறிபார்த்து வேலை எறிந்தான். யானையோடு வேலும் போய் விட்டது. வெறுங்கையன் ஆனான். அப்போது பகைவனால் எறியப்பெற்ற வேல் ஒன்று, தன் மார்பின் மீது வந்து பாய்ந்தது. வீரன் அதனைப் பிடுங்கிக் கைப் பற்றிக்கொண்டு நகைத்தான் என்பதே இக்குறள் கூறும் வரலாறு.

“கைவேல் களிற்றொடு போக்கி” என்பது, வேலின் தாக்குதலால் புண்பட்டு வீறிட்டுப் பின்வாங்கி ஓடும் யானையினது உடலோடு வேலும் போய்விட்டது என்பதா? அன்றி, களிற்றினது உடலிற் புகுந்து அதன் உயிரைப் போக்கித் தானும் அதன் உடலில் அழுந்தி மறைந்து போயிற்று என்பதா? புலப்படவில்லை. எனினும், இவை இரண்டுமே வீரனுக்கு வெற்றி தருவ தாகும்.

வெற்றிபெற்ற இவன் தன் கை வெறுமையாயிருப்பதைக்கண்டு மறுபடியும் ஒரு கருவியைப் பெறப் போர்க் களத்திலிருந்து திரும்புகிறான். வீரன் திரும்பி வரும் செய்தியைக் குறளில் உள்ள, “வருபவன்” என்ற சொல்லால் அறிய முடிகிறது. அப்போது மாற்றான் ஒருவன் எறிந்த வேல் ஒன்று அவன் மார்பின்மீது வந்து பாய்கிறது. அதைத் தன் கைகளினால் பற்றிப் பறித்துக் கொண்டே நகைக்கிறான்.

நகும் என்பது நகுதல் என்றாகும். இது நகைத்தல், களித்தல், மகிழ்தல் என்பவைகளைக் குறிக்கும். வீரன் ஏன் நகைத்தான்? எதன் பொருட்டு நகைக்கிறான்?



தி.—4