பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௧௨௬

முன்னுரை 


பேராசான், அவ்வாரிய இனநிலைப் பரவல்களை வெளிப்படையாக எதிர்த்துப் போராடுவதற்கேற்ற சூழ்நிலை வாயாமற் போன அக்கால நிலையில், (ஆரிவியலை வெளிப்படையாக எதிர்த்துப் போராட இக்காலச் சூழ்நிலையிலும்கூட, பலரும் முன்வராத நிலையை எண்ணிப் பொருத்திப் பார்க்க) அம் மாறுபட்ட ஆரிய இனவியல், வாழ்வியல், கலை, பண்பாட்டியல், அரசியல், பொருளியல், அறவியல் நிலைகளைத் தவிர்க்கவும், நந்தமிழினத்தவர்களிடம் ஏற்கனவே, நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே, தோன்றி விளங்கிக் கால்கொண்டு சிறந்திருந்த தமிழியல் அறக்கூறுகளையும், பொருளியல், அரசியல் கூறுகளாகிய புறக் கூறுகளையும், வாழ்வியல் கூறுகளாகிய இல்லறவியல், இன்பியல் கூறுகளையும், அவ்வாரியவியல்களோடு கலந்து மாசுற்று இழிந்து விடாமல் கட்டிக் காத்தற் பொருட்டாகவும், அவை அனைத்தையும் பின்னர் வழிவழியாக வரும், தமிழின மக்களுக்கும் பிற உலக மாந்தர்க்கும் இவை இவை என்று பிரித்துக் காட்டி உணர்த்துதற் பொருட்டாகவும், தொகுத்தும் வகுத்தும் வடிவப்படுத்திக் காட்டவுமே, இந்நூலை உருவாக்கிக் கொடுத்திருத்தல் வேண்டும் என்க. இல்லெனில், இதுபோலும் அறம், பொருள், இன்பவியற் கூறுகளை முறையுறத் தொகுத்து, வகையுற வகுத்துக் கொடுக்கும் முயற்சியை, அக்காலப் புலவோருள் வேறு எவருமே எண்ணாதும் நூல் வடிவாய் இயற்றாதும் இருக்க, இவர் ஒருவர் மட்டுமே இத்தகு ஒரு நூல் செய்திருக்க வேண்டிய தேவை என்னவாக இருந்திருக்கும் என்று நல்லறிவினார் சிந்தித்து உணர்க.

அக்கால் பரவியிருந்த ஆரியவியற் கருத்துகள் மாந்தவியலையே மாசுபடுத்துவனவாகவும், இழிவுபடுத்துவனவாகவும் இருந்து, இன்றளவும் தமிழியலை ஆட்டிப்படைத்துக் கொண்டுள்ளன என்பதை நாம் தெளிவாக அறிதல் வேண்டும். அவற்றின் கொடுமைகளையும், ஈவு இரக்க மற்ற தன்மைகளையும், மக்கள் இழிவு நிலைகளையும் அழிவு நிலைகளையும் ஓரளவேனும் உணர்ந்திருந்தால்தான் திருக்குறள் கூறும் தமிழியலின் உயர்வையும் சிறப்பையும், மீமிசை மாந்தக் கோட்பாடுகளையும் நன்கு அறிந்துகொள்ளமுடியும். எனவே, ஆரியவியல் கொடுநிலைக் கோட்பாடுகளை ஓரளவில் இங்குக் காட்டி, அவற்றுக்கு நேர் எதிராகத் திருக்குறள் கூறும் தமிழியல் கொள்கைகளையும் இணைவைத்துப் பொருத்திக் காட்டுவோம்.

"இனி, இவ்விடத்து இன்னோர் உண்மையையும் நாம் அறிந்து கொள்ளுதல் நல்லது என்க. அஃது, அன்று முதல் இன்று வரை நம் தமிழகத்தும், இவ்விந்தியாவிலும் தொடக்கக் காலத்து, இந்நில முழுவதும் வேரூன்றிப் பற்றிப் படர்ந்திருந்த நம் பழந்தமிழ்ப் பண்பாட்டுடன், ஊடுருவிக் கலந்து மயங்கி வளர்ந்திருக்கும் ஆரியப் பண்பாட்டிலும், வாழ்வியல், அறவியல், மெய்யியல் கருத்துகளிலும் சிற்சில மாந்தவியலுக்கும்