பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨௧௦

முன்னுரை 


பார்த்தல் வேண்டும் என்க. இவ்வகையிலும் ஆரியவியலையும் தமிழியலையும் ஒப்பிட்டுப் பார்க்கில் அதனினும் இதன் பண்பாட்டுப் பெருமையும் மாந்தநேயப் பொதுமையும், பெண்டிரைத் தாழ்வாகக் கருதாத தன்மையும் பல நூறு மடங்கு பெரிதாகும். ஆரியவியலின் இவ்வகை இழிவு நிலைகளை அவர்தம் காமவியல் நூல்களில் நன்கு தெளியலாம்.

இனி, இவ்வதிகாரத்துள்ள இன்னொரு நுட்பமும் நன்கு உணர்ந்து கொள்ளற்பாலது. இதில், வரைவின் மகளிரின் பொதுவான தன்மைகளைக் குறிப்பதைவிட அவரிடத்துக் காமவின்பம் நோக்கிச் செல்லும் செல்வர், அறிவுடையவர், பொதுநிலை ஆடவர்தம் இழிவுகளும் தாழ்வுகளுமே மிகுதியும் கூறப்பெறுவதையும் கருதுமிடத்து, இங்கும் ஆணாளுமை, கடியப்பெறுகிறது என்க.

இதில் இத்தகைப் பெண்டிர், அன்பின் விழையார், பொருள் விழைபவர்(911), இனிய சொல்லினார், பண்பில் மகளிர் (912), பொருட் பெண்டிர் (913), பொருட் பொருளார் பொருள் நோக்கினர் (914), பொது நலத்திற்குரியவர் 915),தங்கள் மேனி அழகினைச் செயற்கையால் மிகுவித்துப் புன்மை நலத்தைத் தருபவர் (916) கற்பு நெஞ்சம் இல்லாதவர் (917), பிறரைப் பெண்மையால் மயக்கும் மாய மகளிர் (918), மணந்து கொள்ளாமல் வரை துறையின்றிப் பழகும் பெருமைமிகு நகைகளை அணிந்து புனைவு செய்து கொள்பவர் 91) இரண்டு மனங்கள் கொண்ட வஞ்சகர் (920) ஆகிய சொற்களால் கூறப்பெற்றுள்ளார்.

ஆனால், இவருடன் தொடர்பு கொள்ளும் ஒழுங்கிலா ஆடவர்களை நூலாசிரியர், நேர்மையற்றவர் (912), இருட்டறையில் ஏதிலி (அனாதைப் பினங்களையும் தழுவத் துடிக்கும் மூடர் (913) அருளை ஆராயும் அறிவில் லாதவர் (914) மதிநலம் இல்லாத சிறுமை அறிவுடையவர் (915), தந்நலம் கருதுபவர், புல்லிய இன்ப நாட்ட உணர்வுடையவர் (915), நிறை நெஞ்சம் இல்லாதவர் (917) எதையும் ஆராயும் அறிவில்லாதவர் (918), பெருமையில் லாத கீழ்மக்கள் (919)செல்வத்தை அழிப்பவர் (910)-எனப் பலபட இழித்துக் கூறுவர்.

எனவே இதிலும் ஆணாளுமை இழிக்கப்பட்டும், பழிக்கப்பட்டும் கூறப்பெறுவதுடன், பெண்மையழிவு இரக்கவுணர்வுடனும் அவர்கள் வாழும் இழிவுச் சூழலுடனும் குறிக்கப்பெற்றிருப்பதை நல்லறிவினார் கண்டு கொள்க.

இனி இவ்வகையில், கூறப்பெற்ற கருத்துகளுள், நேரிடையாகவும் வெளிப்படையாகவும் புலப்படுகின்ற கருத்துகள் தவிர, பொதுவாகவும், தாம் எடுத்துக்கொண்ட பொருளோடு புணர்த்தியும் கூறப்பெறும் சில கூற்றுகளையும் கவனிப்போம்.