பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௧௧



இந்நூலுள் வரும் மக்கட்டேறு என்னும் அதிகாரத்துள் தலைப்பாலும் பொருளாலும் வைக்கப்பெற்ற ஆண், பெண் பொதுமைக் கோட்பாட்டை, ஆரியவியல் சார்பான உரைகாரராகிய பரிமேலழகர், தம் கருத்தியலுக்கு ஒத்த வகையில், பெண்மையைத் தாழ்த்தியும், ஆண்மையை உயர்த்தியும் கூறும் உரைகள் திருவள்ளுவர்தம் பெருந்தகைமைக்கும், தமிழியலின் பொதுத் தன்மைக்கும் இழுக்குச் சேர்ப்பனவாகும். அவை உரையால் நேர்ந்த கேடேயன்றி, நூலால் மிடைந்த கேடு ஆகா வென்று உணர்க.

இவ்வதிகாரத் தலைப்பே மக்கள் என்ற சொல்லை மாற்றிப் புதல்வர் என்று அவரால் தரப்பெற்றுள்ளது.

'புத்' என்னும் நிரையம் (நரகம்) செல்லாமற் காப்பதால் மக்கள் புதல்வர் என்பது ஆரியவியல் ஆகையால் இவ்வதிகாரத்திற்குப் புதல்வரைப் பெறுதல் என்று பரிமேலழகர் பெயர் தந்தார் என்க.

அத்துடன் அமையாது. இவ்வதிகாரத்தின் முதல் குறளாகிய

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற -61

- என்னும் பாவிற்குச் சிறப்புப் பொருள் எழுதுகையில் "அறிவறிந்த என்ற அதனால் மக்கள் என்னும் பெயர் பெண் ஒழிந்து நின்றது. இதனால் புதல்வர்ப் போற்றினது சிறப்புக் கூறப்பட்டது" என்றும்

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிப்பிறங்கா
பண்புடை மக்கட் பெறின் -62

என்னும் குறளுரையில், சிறப்புரையாக "அவன் (தந்தை) தீவினை வளராது தேய்தற்குக் காரணம் ஆகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரை (ஆண் மக்களை)ப் பெறுவான் ஆயின் என்றவாறு ஆயிற்று. தந்தை தாயர் தீவினை தேய்தற் பொருட்டு அவரை நோக்கிப் புதல்வர் செய்யும் தான தருமங்கட்கு அவர் நற்குணம் காரணமாகலின் பண்பு என்னும் காரணப் பெயர் காரியத்தின. மேல் நின்றது" என்றும் கூறி, ஆண்மக்களே பெருமையு டையவர்கள். அவர்களே பெற்றோர்க்கு வரும் கரிசு (பாவங்)களை நல்லன. ஆற்றித் தடுக்க முடியும் என்று ஆரியவியல் வழி விதந்து கூறினார். மற்றும்,

 பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன்
எனக் கேட்ட தாய் -69

என்னும் குறட்பாவின் விளக்கவுரையில், "பெண்ணியியல் பால் தானாக அறியாமையின் கேட்ட தாய் எனவும் கூறினார்" என்று பெண்ணுக்குத் தானாக அறிந்து கொள்ளும் ஆற்றலில்லை என்றும் பெண்மையை இழிவுபடுத்தினார் என்க.