பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/259

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

உருரு


 உயிரியல், உளவியல், குமுகாய உளவியல், இயங்கியல், இயல்பியல், இயற்கையியல், மூளையியல், உடலியல், அறிவியல், பறவையியல், விலங்கியல், உலகியல், நிலவியல், கடலியல், வானியல் - முதலியவற்றுள் ஒரளவு இயற்கையாகவே அறிவும் ஈடுபாடும், பன்னூற் பயிற்சியும், இவற்றுளெல்லாம் முழு அளவு இன்றாயினும் ஒரளவு தெரிதலறிவும் இருந்தால் தான் இதில் கூறப்பெறும் கருத்துகளை மனங்கொண்டும், இனங் கண்டும், உண்மை உணர்ந்தும், அகல ஆழங் கண்டும், விண்டுரைக்கவும், விளக்கியுரைக்கவும் இயலும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும்.

மற்றபடி, திருக்குறளைக் கற்று உரை கூறும் அறிவுடையாரும், திறனாய்வு செய்யும் தருக்கவியலாரும், பட்டிமன்றமும் பாமன்றமும் ஏறும் பாத்திறன் பெற்றவர்களும், திருக்குறள் திறன்களை வியந்தும் விதந்தும், மனனம் செய்தும், உரையாற்றுவாரும், திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரிய, பேராசிரியன்மாரும், மதவியல் சார்ந்தாரும், விரிவுரை செய்வாரும், அதன்மேல் கொண்ட பற்றினாலும், வியப்பினாலும் மதிப்பினாலும் ஈடுபாட்டாலும், முற்கூறியது கூறல் திறத்தினாலும், இதழாசிரியத் திறத்தினாலும் மொத்தத்தில் அதைக் கற்ற் அறிவினாலும் ஆர்வத்தினாலும் மட்டும் இந்நூலுக்கு உரைகண்டு விடல் முடியாது; இயலாது; அது மிக மிகக் கடினம் என்க.

வெறுமனே பலவுரைகளையும் பரிந்து நோக்கிப் புரிந்துகொண்டு, தற்சிந்தனையின்றி, அங்கொன்றும், இங்கொன்றுமாக, அவற்றிலுள்ள சொற்களையும், பொருள்களையும் தேர்ந்துகொண்டு, அவற்றை முன்னும் பின்னும், தொகுத்தும் வகுத்தும், சேர்த்தும் பிரித்தும், திரித்தும் செறித்தும், பின்னியும் பிணித்தும், திசைத்தும் இசைத்தும், இணைத்தும் பிணைத்தும், சுற்றியும் வளைத்தும், முன்னுள்ள உரைகாரர்களை ஒட்டியும் வெட்டியும், பற்றியும் சுற்றியும், அல்லது தற்சிந்தனையுள்ளவர் போல் விளக்கியும் கலக்கியும், ஒடும் தண்டவாளத்தில் ஒடுகின்ற மக்கள் வண்டியும், சரக்கு வண்டியும், தனி இழு இயந்திரமும், ஆளோடியும், வெள்ளோட்ட வண்டியும் போலப் பகர்ந்த உரைகளே இன்றைய நிலையில், திருக்குறள் உரைகளாக உள்ளன.

எடுத்த எடுப்பில், படித்தவுடன் உரத்த சிந்தனையின்றி, ஏற்ற இறக்கமாகப் புகுத்திவிடும் மெலிந்த சிந்தனையாளர்களே இன்றுவரையெழுத்துள்ள உரைகாரர்களில் பெரும்பாலார் என்பதை எழுத எம்துநூய தமிழியல் நெஞ்சம் மிக நோகின்றது. ஆயினும் இதை வெளிப்படுத்தாமல் இருக்க எம் அறிவுணர்வு இடந்தரவில்லை. இதனை வெளிப்படுத்திக் காட்டாவிடில், அதுவும் மங்கி மறைந்துவிடுமோ என்னும் அச்சத்திலேயே இக்கருத்துகளை இங்கு வெளிப்படுத்துதற்கு மனம் துணிந்தது. மற்றபடி செருக்குணர்வோ, மிடுக்குணர்வோ இவ்வறிவு எளியேமுக்கு என்றும் இருந்ததில்லை. எதனையும்