பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௪௩


இம்முன்னுரை எழுதப்பெறாத நிலையில், வெளியிடற் கியலாமல் போனது.

ஆனாலும், அதன் இடையீட்டுச் சிறையிருந்த ஏழு மாதக் காலத்தையும், சிறைக்குள்ளிருந்தவாறே, தொடர்ந்து உரையெழுத வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது என்பதும் ஓர் இறையருளே! அதன்படி வெளியிலிருந்து எழுதிய இம் முதல் பகுதியைத் தொடர்ந்து, மேலும் மூன்று பகுதிகள், அஃதாவது ஏறத்தாழ ஆயிரத்து எண்ணுறு பக்கங்கள் சிறைக்குள்ளேயே எழுதி முடிக்கப்பெற்றன.

அதன் பின்னர், சிறைமீண்டு வந்த பின்னும், இரண்டு மூன்று மாதங்கள் எம் வீடு மாற்றத்திலும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த எம் குடும்ப நிலைத்துயரத் தாக்கங்களிலும், எம் அன்னையார் மறைவாலும், அழுந்தியிருந்த ஒர் அமைவற்ற சூழலாலும், இம் முன்னுரை எழுதப் பெற்று, இவ்வுரையின் முதல் பகுதியாகிய இந்நூல் வெளிவர இத்துணைக் காலத்தாழ்வு நேர்ந்துவிட்டது என்க.

இனி, இத் ‘திருக்குறள் மெய்ப்பொருளுரை’ என்னும் இந்நூல், இன்றைய மதிப்பீட்டின்படி, ஏறத்தாழ எண்ணாயிரம் பக்கங்கள் கொண்டதாகவும், அவை ஒவ்வொன்றும் ஏறத்தாழ அறுநூறு பக்கங்களைக் கொண்ட, பதினான்கு அல்லது பதினைந்து பகுதிகளாக, ஒன்றன் பின் ஒன்றாக, ஏறத்தாழ ஐந்தாண்டு எல்லைக்குள் வெளிவரும் என்றும் திட்டமிட்டுள்ளோம். தொடக்கத்தில் எண்ணியிருந்த நிலை வேறு; இக்கால் எண்ணியிருக்கின்ற இந்நிலை வேறு. இனி, இதனினும் மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழலாம். உடல் நிலையும் காலநிலையும் பொருள் வாய்ப்புகளும் வாய்க்கின்ற நிலைகளைப் பொறுத்தும் இவ்வெளியீடுகள் மாற்றமும் பெறலாம். திருவருட் டேறு எவ்வாறு இயங்குகின்றதோ அதைப் பொறுத்தது, அது.

இனி, திருக்குறள் பற்றிய பெருமை கூறுகையில், யாவரினும் மேலாகவும் சுருக்கமாகவும், இடைக்காடர்,

"கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்”

- தி.வ.மா: 54.

என்றும், ஒளவையார் அதனினும் நுட்பமாக,

“அணுவைத் துளைத்(து) ஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்“

- தி.வ.மா: 55.

என்றும் கூறுவர். இங்கு இருவரும் அஃது ஒரு கடல் போன்றது என்று கூறியது எண்ணி வியக்கத்தக்கது. உண்மையிலேயே திருக்குறள்