பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௪௫


இன்னும் தெளிவாகச் சொன்னால், அணுக்களும், அண்டங்களும் அவற்றின் இயக்கங்களும் மெய்ம்மமே! அவற்றின் தவறும் சரியும்கூட மெய்ம்மமே! அவற்றின் விரிவும் விளக்கங்களும் கூட மெய்ம்மமே!

இவற்றின் மெய்ம்ம இருப்பையே திருக்குறள் கூறுகிறது. மெய்ம்மங்களின் - இயற்கையின் - சுழற்சியிலே மாந்த மெய்ம்மத்தை மட்டும் தனியே பிரித்தெடுத்துக் கூர்மைப் படுத்தி, அதன் இயக்க நிலைகளைக் காட்டும் முயற்சியே திருக்குறள். அதன் முடிவு காண்கின்ற முயற்சிகளே உரைகள். அவற்றின் வெற்றியும் தோல்வியும் காலத்தையும் கருத்தையும் பொறுத்தன.

மாந்தருள் ஆண், பெண் பெயர்களும், ஆணுக்குத் தந்தை, மகன், அண்ணன், தம்பி, நண்பன், உறவன், கணவன்-முதலிய பெயர்களும், பெண்ணுக்குத் தாய், மகள், அக்கை, தங்கை, நண்பி, உறவி, மனைவி -முதலிய பெயர்களும், மாந்த மெய்ம்மத்தின் இருப்பு மாற்றங்களே! இவர்தம் உறவையும் உறழ்வையும், அவற்றால் விளையும் பயன்களையும் விளக்குவதே திருக்குறள். அவற்றை மேலும் நன்கு புலப்படுமாறு விளங்கச் செய்வனவே உரைகள்! அவற்றின் துல்லியத்தைக் காண்பதே இம் மெய்ப்பொருள் உரை!

இனி, திருக்குறளில் இவ்வளவுதாம் சொல்லலாம் என்பதில்லை; இன்னமும் சொல்லலாம் எவ்வளவும் சொல்லலாம். உலக உயிர்களில் சிறந்து நிற்கும் மாந்தனின் உறவுகளையும், துய்ப்புகளையும், இன்ப துன்பங்களையும், எழுச்சி ஒடுக்கங்களையும் ஒருவாறு அடையாளம் காட்டி விளக்கிக் கூறுகிறது, திருக்குறள் - அவற்றை இஃது இன்னின்னது என்று சுட்டிக் காட்டுகிறது இவ்வுரை.

இதில் சாதியில்லை; மதமில்லை; இனமில்லை. மாந்த இனத்தை வேறு பிரிக்கும் எந்த வேற்றுமைக் கூறும் இதில் இல்லை, என்க.

காற்று, உலகெங்கும் வீசிக்கொண்டிருந்தாலும் ஒர் இடத்திலும் உறைந்து நின்று விடாதது போல், மாந்த இனம் பல்வேறு இயக்கங்கட்கு ஆட்பட்டிருந்தாலும், ஒன்றினும் உறைந்துவிடக்கூடாது என்பதே திருக்குறள் கூறும் மாந்த மெய்ம்மம்.

மாந்தன் இயங்குவதுதான் இல்லறம், அரசியல், பொருளியல், வாழ்வியல்:

அவன் நின்று நிலைத்துவிடுவது தான் துறவறம், பேரா இயற்கை!

இந்நிலைகளையெல்லாம் முற்ற முடிந்த நிலையில் அடையாளம் காட்டிப் பேசுவதுதான். இம் மெய்ப்பொருள் உரை!