பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

187

அ - 2 - 1 -இல்லறவியல் - 5


தீ - தீய் - தெய் - தெய்வம் - அழிப்பது என்னும் பொருளில் தோன்றி, பின் ஆக்கல் பொருளிலும் வழக்குறும் சொல்லாய் நின்றது என்க.

மாந்தர் இறந்த பின்னர் அவர்களின் உயிர்கள் ஆவிவடிவில் வானத்துத் தெய்வ நிலையில் உலவுவதாகவும், உறைவதாகவும் கற்பனை செய்துகொண்டனர். அவ்வுயிர்கள் தெய்வநிலையில் உள்ளவரை மக்களுடன் தொடர்பு கொள்வதாகவும், அவை தம் பிறங்கடை மக்களுக்கு அவ்வப் பொழுதும், அவர்கள் வேண்டியவிடத்தும், இவ்வுலக நிலைக்குக் கீழிறங்கி வந்து, அவர்களுக்கு வேண்டியவை தந்து நன்மை செய்வதாகவும் ஒரு நம்பிக்கை கொண்டிருந்தனர். இன்றும் அந்த நம்பிக்கை மக்களிடம் உண்டு. இஃது அறிவியல் சாராத மிகு கற்பனை என்க. மக்கள் தங்கள் துன்பங்களுக்கு இத்தகு கற்பனையால் விளைந்த நம்பிக்கையினால் ஆறுதலும், மனத்தேற்றமும் கொள்வது இன்றளவும் உள்ளதால் இத் தெய்வக் கற்பனையும் கடவுள் நம்பிக்கையும் தொடர்ந்து வருகின்றன என்க. இக்கற்பனைகள் அறிவியல் அடிப்படையில் உண்மை என்று இதுவரை எவராலும் மெய்ப்பிக்கப்படவில்லை. இருப்பினும், மன இயக்கத்தின் அடிப்படையில் இயங்கும் மனவாற்றல் கூறுகளால் சில நம்பிக்கைகள் செயல்களாக நடைபெறுவது அறியப்பெற்று வருகிறது.

இந்நிலைகள் தவிர, இயற்கையாய் இயங்கும் அனைத்துப் பொருள்களுக்கும் ஆற்றல்களுக்கும் மூலமாகவும், முதலாகவும் உள்ள பேராற்றலை இறைமை, இறைவன் என்னும் சொற்களால் தமிழியல் மெய்யறிவியல் கூறுகிறது. இம் மெய்யறிவியல் கோட்பாடு அறிவியலினும் மேம்பட்ட உணர்வறிவு நிலை என்றும் மெய்யறிவியல் அறிஞர் கூறுவர். இது மதமன்று. மதவியல் கூறும் அன்று. ஆனாலும் இதை மதத்தினும் உள்ளடக்கியே முந்தைய தமிழியல் அறிஞர்கள் பற்பல மதவியல் கோட்பாடுகளைக் கூறினர் என்க.

இவற்றின் மிக விரிவான ஆய்வுண்மைகளை எம் நிறைவுரையில் கண்டு கொள்க.

ஈண்டு விரிக்கின் பெருகுமாகலின் இவ்வளவில் நிறுத்தி, கூறப்பெற்ற நம்பிக்கைக் கோட்பாடாகிய தெய்வக் கருத்துகளை நூலாசிரியர் கூறியவாறே உரைகொள்ளுவோம்.

வையத்து, தமக்குற்ற வாழ்வியல் கூறுகளை ஒழுங்கு படுத்திக் கொண்டு - முறைப்படுத்திக் கொண்டு, தன்னால் பிறர்க்கும் பிறரால் தனக்கும் துன்பம் நேராவண்ணம், அதற்குப் பகரமாக இன்பமே