பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

188


வரும் வண்ணம், பொதுநல அறம் பேணி, கூடியிருந்து ஒரு குமுகமாக, வாழ்வாங்கு வாழ்ந்து பெருமையும் புகழும் பெறும் ஒருவன், ஏற்கனவே இங்கு அவ்வாறு இருந்து மறைந்து, மக்கள் மீண்டும் மீண்டும் நினைக்கத்தகும் தெய்வங்களாக நின்று போற்றப் பெறுவார்களுள் ஒருவனாக வைத்துப் போற்றப்பெறுவான் என்பதே ஆசிரியர் கருத்து.

நூலாசிரியரும், பிற பொதுநலம் பேணிய செயற்கரிய செய்த மாந்தரும் ஈண்டும் மக்களால் வணங்கப்பெறும் தெய்வங்களாக இருப்பதைக் கண்டு தெளிக.

இதுவே வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பயனும் என்க.

4. இல்வாழ்வான் ஒருவன் பொதுமாந்த நிலையில், சிறப்புற அறம் பேணிப், பிறர்க்குப் பயனுடையவனாய் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வ நிலைக்கு உயர்ந்து நிற்கும் வாழ்வியல் கூறுகளையும் கடைப்பிடிகளையும் அவற்றின் நுட்பங்களையும் இவ்வதிகாரத்துள் கூறினார் என்க.

இனி, இல்வாழ்க்கைக்குரிய உறுப்புகளுள் வாழ்க்கைத் துணைவியாய் வரும் இல்லறத் தலைவியினது சிறப்பியல்களை அடுத்த அதிகாரத்துள் கூறுவார்.