பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

221


- எனவே, பிறர் செய்த தீமையை மறக்க உதவுவது அறிவுணர்வே ஆகலின், அவ்வறிவுணர்வால் அவர் செய்த தீமையின் கொடுமையையும், அதைப் பொறுத்துக் கொண்டதால் தமக்கு ஏற்பட்ட பெருமிதத்தையும் ஒருசேர மறந்துவிடுதலே மிகு நன்மை பயப்பது என்று உணர்த்தினார் என்க.

அதனினும் நன்று - அப் பொறுத்தல் நன்மையினும் அத் தொடர் நிகழ்வை மறத்தலால் ஏற்படும் நன்மை மிக்கதாம் என்றார், என்னை?

- அதை மறத்தலால், தாம் மேன்மேலும் அறவுணர்வில் ஈடுபடுவதும், அதனால் பற்பல நன்மைகள் நிகழ்வதும், அவற்றின்வழி உள்ளம் ஊக்கம் இழவாமல் தம் வாழ்வியற் கடமைகளைச் செய்வதும் இயல்வதாகலின் இல்லெனின், அவர் செய்த தீமைகள் எப்பொழுதும் மனத்தின்கண் ஊடாடி நிற்பவும், அதனால் உள்ளம் ஊக்கம் இழப்பதும், அந்நிலை தம் பொதுஅற ஈடுபாட்டிற்குப் பெருந்தடையாய் இருப்பதும், அதுபற்றி வாழ்வியல் நன்மை கெடுவதும் இயல்பாம் என்க. இந்நிலை அத் தீமையினும் தீமை தருவதாம் என்றும் உணர்க.

3. இது, முன் குறளில் கூறிய பொறுத்தல் தன்மையின் நன்மையையும், அதனைவிட அதை மறத்தல் தன்மையால் விளையும் பெரும் நன்மையையும் கூறியதால், அதன் பின்னர் இது வைக்கப் பெற்றது, என்க.

கருங. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. 153 -

பொருள் கோள் முறை : இயல்பு.

பொழிப்புரை இல்லாமையுள் கேடான இல்லாமையாவது, வரும் விருந்தை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பது. அதுபோல் வல்லமையுள் மிகுந்த வல்லமையாவது, பேதையர் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்வது.

சில விளக்கக் குறிப்புகள் :

1.இன்மையுள் இன்மை விருந்துஒரால் - இல்லாமையுள் கேடான இல்லாமையாவது, வரும் விருந்தை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பது.

இன்மையுள் இன்மை - இல்லாமையுள் கேடான இல்லாமையாவது இதற்கு உரையாசிரியர் அனைவரும் வறுமை என்றே பொருளுரைப்பர்.