பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் உரையாக இன்னோர் உரையையும் கீழ்வருமாறு வரைவாா.

“ஒருவர் ஒருவர்க்குச் செய்த நன்றி மேற்கூறிய நால்வகை யுதவியளவினது மட்டுமன்று; நன்றி செய்யப்பட்டவரின் மேன்மையளவினதுமாகும்.”

என்பது கூறி,

“இது,

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்’

என்னும் கருத்தை யொத்தது. அங்குக் கூறியது விருந்தோம்பல் பற்றியது. இங்குக் கூறியது வேறுவகை நன்றி பற்றியது” என்று விதந்துங் கூறுவாா்.

மொழியறிஞர் பாவாணர் அவர்களின் இரண்டாம் உரைதவிர அவரின் முதலுரையும், அவர்க்கு முன்னுரையாளர்களின் முழுவுரையும் ஏற்புடையனவல்ல. என்னை?

இவ் வதிகாரத்திற்கு ஆசிரியர் இட்ட தலைப்பு, 'செய்ந்நன்றி அறிதல்’ என்பதே. அதன் கொள்பொருள் ஒருவர் செய்த நன்றியை உணர்ந்து நினைந்திருத்தலே ஆகும். திருப்பிச் செய்தல் என்னும் கருத்தை அஃது அறிவிக்கவில்லை.

நன்றியறிதல் வேறு நன்றிகாட்டுவது வேறு. தமக்குத் தேவையான விடத்து உதவினார்க்குத் தாமும் அவர்க்குத் தேவையான விடத்துத் தம்மளவிலான உதவியைச் செய்வதே நன்றி காட்டுவதாகும். இது தவறன்று கூடாததும் அன்று;

ஆனால் ஒருவர் செய்த உதவியைத் திருப்பிச் செய்வது, பெற்ற பொருளைத் திருப்பித்தரும் கடன்போலாகுமேயன்றி, முதலில் அவர் செய்தது உதவி என்று ஆகாதென்பதை உணர்தல் வேண்டும் உதவுவது உதவி அது திருப்பிச் செலுத்தும் கட்டாயக் கடமைத் தகையது ஆகாது. அவ்வாறாயின் அவ் வுதவி பெருமையிழக்கும் என்பதே இங்கு உணரத்தக்கது.

- இவ்விடத்தில், உதவி பெற்றவர் ஒருவர், உதவி செய்தார். ஏதோ ஒரு வாழ்வு நிலையில் மெலிவுற்று வாடுங்கால், அவர்க்கு உதவி தேவைப்படுதலை யறிந்து, தம்மால் அவர்க்கு உதவ முடியுமாயின் இயன்றளவு உதவுவதும் போற்றத்தக்கதே. அவ்வுதவி அவர் செய்த உதவியினும் மேம்பட்டிருப்பின் இன்னும் பெருமை யுடையதே. ஆகவே உதவி செய்தார்க்குத் தாமும் உதவி செய்யக் கூடாது என்பதை முன்கூறிய கருத்தாகக் கொள்ளுதல் கூடாது. அவ்வாறாயின் அது நன்றியறிதல் ஆகாது என்றும் கொள்க.