பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

119



- அத்துடன், மேலும் மேலும் முயற்சியில் ஈடுபடாதவன் செல்வம், தேய்ந்து கொண்டே போகும் தரத்தது ஆகலின் அவன் தன் பொதுவுணர்வை, ஒப்புரவறிதல் உணர்வைச் செயற்படுத்த வாய்ப்பில்லாமற் போகுமன்றோ? அதனாலும் தாளாற்றுதல் தேவை என்றார், என்க.

- இக் கருத்துகளைப் பழந்தமிழ்ச் சான்றோரும் தம் நூல்கள் நெடுகப் பரக்கக் கூறுவதும் காண்க.

‘தாள்படு செல்வம் காண்தொறும் அருள’ - புறம்: 161:15

‘தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு, ஒருநாள்
கேளாளன் ஆகாமை இல்லை; அவற்கண்டு
வேளாண்மை செய்தன கண்’ - கலி: 161 : 44-46

‘தாளாண்மை நீரும் அமிழ்தாய் விடும்’ - நாலடி. 200:4

'தானே மடிந்திராத் தாளாண்மை முன்னினிதே’ - இனி, நாற்: 332

‘பெருந்தகு தாளாண்மைக்கு ஏற்ப
அரும்பொருள் ஆகும்’ - ஐந்எழு: 29:3

‘எவ்வம் துணையாப் பொருள் முடிக்கும் தாளாண்மை' - பழமொழி:63:1

'..................................................... தாளாண்மை
தாழ்க்கும் மடிகோள் இலராய் வருந்தாதார்
வாழ்க்கை திருந்துதல் இன்று’ - பழமொழி:175:3-4

‘தாளாளர்க்(கு) உண்டோ தவறு' - நாலடி: 191 :4

‘தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்’ - திரிகடு.12:1

'கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாளிலான் குடியேபோல் தமியவே தேயுமால்’ - கலி: 149; 8-9

‘தொடங்குவினை தவிரா அசைவில் நோன்தாள்’ - அகம்: 29 : 1.

‘பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில்
வலிய வாகுநின் தாள்தோய் தடக்கை’ -புறம்: 14:10-11

'தாளில் தந்து தம்புகழ் நிறீஇ’ - புறம் 18:3

‘வாளில் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த
இரவல் மாக்கள் ஈகை நுவல’ - புறம்: 24 : 29-30

‘தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதி
வல்லை மன்ற நீநயந் தளித்தல்’ - புறம்:59: 2-3

'அசைவில் நோன்தாள் நசைவளன்' - புறம்: 148 : 2