பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

63


என்பதும் நன்கு கவனிக்கத் தக்கன.

அதுவன்றி, எந்த ஓர் உலகத்துச் சிறுசெயலுக்கும் இவ்வுலகியல் Secular, wordly, opposed to spiritual - calling - (ondon) அல்லாத வெளியுலகக் கற்பனைப் புனைவுகளைப் பொருத்தி வலித்துப் பொருள் கூறுதல், இவ்வுலகை மதியாத ஒரு செயலும், மக்களை வாழ்வியலில் ஈடுபடச் செய்யாது மதவியல் சேற்றில் கொண்டு புதைப்பதுமான அறியாமையும் ஆகும், என்க.

5) முன்னைய குறளில் சான்றோர் பயனில சொல்லாமை நன்று என்றவர், இதில் அறிவினார் சொல்லார் என்றலின் அதன் பின்னர் இதனை இணை வைத்தார் என்க.

க௬௬ . பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர். - 199

பொருள்கோள் முறை:

மருள் தீர்ந்த மாசறு காட்சியவர்
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார்.

பொழிப்புரை : மனமயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவை உடையவர் பொருட்பயன் நீங்கிய சொற்களை மறதியாகவும் சொல்லமாட்டார்.

சில விளக்கக் குறிப்புகள் :

1) மருள்தீர்ந்த மாசறு காட்சியவர் : மனமயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவை உடையவர்.

மருள் தீர்ந்த - மனமயக்கம் தீர்ந்த,

மருள் - மனமயக்கம். அனைத்து அறியாமைக்கும் மனத்தினது மயக்கமே முதல் காரணம் என்பது மெய்யறிவினார் கொள்கை - ஒன்றை வேறாக நினைப்பதும், பொருள்கள் நிலையானவை என்று நினைப்பதும், பொருளாலேயே எல்லாவற்றையும் விளைவிக்க முடியும் என்று கருதுவதும் மனத்தின் மயக்கநிலை என்பது ஆசிரியர் கருத்து.

- ஏனெனில் மனம் ஆசையைப் பற்றி இயங்குகிறது. அவ்வாசை ஐம்புலன்களைப் பற்றி எழுகிறது. எனவே ஐம்புலன்களின் உணர்வைக் கட்டுப்படுத்தி, மனம் ஆசை கொள்ளாமால் செய்து, அதன்பின் பொருள்களின் மேல் மனம் கொண்டுள்ள மயக்கத்தை நீக்கிய