பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ii) வடகரை அரசரான சின்னணஞ்சாத் தேவரின் அவைப் பெரும் புலவராக ஒளிவீசிய கவிராயரவர்கள், இக் குறவஞ்சியைப் பாடியதும், அன்றைய விஜயரங்க சொக்கலிங்க நாயகரான மதுரை மன்னரின் பாராட்டையும் பரிசையும் பெற்றனர். குறவஞ்சி மேடு கவிராயர் அந்நாளிற் பெற்ற நிலக் கொடையாகும்.

திருவாவடுதுரை ஆதீன கர்த்தரும், சைவ சித்தாந்த விளக்கும், பேரறிஞருமான சுப்பிரமணிய தேசிகர் அவர்கள் நம் கவிராயர் குடும்பத்திலே பிறந்தவர்கள்தாம். இது இக்குடியின் பெருஞ் சிறப்பு!

இத் தேசிகர் பெருமானே, டாக்டர் உ.வே.சா. அவர்களுக்கு உறுதுணையாக விளங்கி, அவர்களைத் தமிழ் உலகுக்கு அளித்தவருள் ஒருவராவார்; மற்றொருவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள்.

திக்கெலாம் புகழ்கொண்ட குற்றாலச் சாரலைப் போலவே, இக்குறவஞ்சியும் எங்கும் புகழ் கொண்டது. இதனை அச்சிற்பதித்தும் பலர் அந்நாளில் வழங்கினர். அவற்றுள் திரு.கே.எஸ்.கற்பகவிநாயகம் பிள்ளை அவர்களின் பதிப்பும், திருக்கோவிற் பதிப்புமே மிகச் சிறந்தனவாகும்.

முடிவாக, என்னையும் தமிழ்ப் பணிக்கு உரியவனாக்கி, என்னுள்ளே தமிழாய்த் தானே நின்று இயக்கிவரும் மகா சக்தியின் ஈடிலாப் பேரருளையும் போற்றி, இதனைத் தமிழன்பர்கட்கும் மகிழ்வுடன் வழங்குகின்றேன்.

வாழ்க தமிழ்! வாழ்க தமிழார்வம்!

புலியூர்க் கேசிகன்