8
“அனுதாபம்தான் பெரிசா இருக்கு. அவன் உன்னால்தானே வலிப்பால் மயங்கி விழுந்தான். நீ மோசமான வார்த்தையால் திட்டியதால் தானே அவன் உணர்ச்சி வசப்பட்டான். மாணிக்கம் உணர்ச்சி வசப்பட்டால் அவனுக்கு இப்படி ஏற்படும் என்பது உனக்கும் தெரிந்தது தானே. எல்லாத்துக்கும் நீயே காரணமாய் இருந்துட்டு இப்ப வந்து பெரிசா அனுதாபப்படறியோ!”
நேரடியாக நெத்தியடிபோல் பொரிந்து தள்ளினான் அருள். கனமாக இருந்த அவன் மனம் லேசானதுபோல் தோன்றியது.
மேலும் தொடர்ந்தான் அருள்:
“மாணிக்கம் மயக்கமா விழறப்போ நீ பக்கத்திலேதானே இருந்தே; அப்போ நீ பயந்து போய் விலகிப் போனியே தவிர ஓடிப்போய் உதவலையே. மூணாவது வரிசையிலே இருந்த இனியன் எவ்வளவு வேகமாக விரைந்துபோய் தூக்கினான்.”
அருள் கூறியதை ஆமோதிப்பவன் போல் மணியும் ஒத்துப் பேசினான்:
“அதோட மயக்கம் தெளிந்த மாணிக்கத்தை அவன்தானே வீட்டுக்கும் அழைச்சிட்டுப் போயிருக்கான்.”