பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


ஒருமுறை விந்தன் அவர்களும், மறுமுறை அந்நாளைய சிவாஜியும் படித்துப் படித்துச் செப்பின மதிப்புக்குரிய கருத்துக்களையும் அவர் மறந்துவிட மாட்டார்.

நிலா முற்றத்தில் பகல் செய்வோன் கதிர்களைக் கடை பரப்பியிருந்தான்.

‘சினிமா சான்ஸ் கைகூடினால் ஆண்டவன் கடாட்சம்தான். வாணியின் வருகை சுபசூசகமாகத்தான் அமையத் தொடங்கியிருக்கிறது. தமிழரசிப்பத்திரிகையின் வருமானமான இருநூறு ரூபாயும் அடுத்த மாசத்துடன் நின்றுவிடும். ஏனென்றால் என் பணியும் நின்றுவிடும். முதலாளியின் மனசுக்கு உகந்த காரியத்தைச் செய்ய முடியாமல் இருக்கையில், அவர் உப்பை இனியும் தின்னலாமா? இனி நடக்க வேண்டிய பிழைப்புக்குத் திரையுலகம் உதவினால் நல்லதுதான். அம்மா, வாணி இருவரையும் அழைத்துப் போய்ப் பட்டணத்தில் குடித்தனம் ஆரம்பித்து விடலாம்.

இவ்வாறு ஆனந்தமான மனோலயப் பின்னணியில் உட்கார்ந்திருந்தார் ஞானசீலன். மகிழ்வில் பூத்த மனம் சுந்தரக் கனவுகளைப் பின்னின.

மெல்லிளங்காற்று பூமணத்தைச் சுமந்து வந்தது. பூமணம் பூவையைச் சுமந்து வந்தது. வாணி வந்தாள். அவளுடன் அமுதச் சிரிப்பு வந்தது; கவின்மிகு பார்வை வந்தது.

“வா, வாணி,” என்று உபசரித்து, “காப்பி எல்லாம் ஆகிவிட்டதா?” என்று விசாரித்தார்.

“ஆமாம்...ட்யூஷன் முடிந்தது. இனிமேல் ஸ்கூலுக்குப் போக வேண்டும். வழியில் பார்த்து விட்டுப் போக வேண்டுமென்று வந்தேன்.”