பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 117



பேச்சுக்குச் சொல்வதாக நினைக்கப் போக, இப்போது எதையோ ஒன்றை உள்ளடக்கிப் பேசுவது போலத் தோன்றுகின்றதே?

"ஸார்!..."

"தவசீலி !..."

"ம்" என்று 'உம்' கொட்டிவிட்டு, பிறகு, சந்தடி ஏதும் காணப்படுகிறதா என்று ஆராய்ந்து பார்த்தவாறு சந்தடி எதையும் காணாததால் உண்டான அமைதியுடன் அவள் பேசலானாள்; "ஆசிரியர் ஸார் ! உங்களுக்குக் காதலில் நம்பிக்கை உண்டல்லவா?"

ஞானசீலன் அவளை இப்போது துணிவின் துணையுடன் ஊடுருவிப் பார்த்துவிட்டுச் சொன்னார். "சொல்கிறேன். ஊதுவத்தி இருக்கிறது பாருங்கள். அது தன்னை அழித்துக் கொண்டு பிறருக்கு மணம் தரும். ஆனால் காதலோ சம்பந்தப்பட்டவர்களை அழித்துவிட்டு அது உயர்ந்து நிற்க வல்லது! காதல் என்பது ஒரு பொய் விளையாட்டு, கண்டதும் காதல் முளைப்பது எழுத்துக்களில் மட்டுமே ஜீவனுடன் விளங்கும். நடைமுறை வாழ்க்கையில் காதல் என்று சொன்னால், அது அன்பு என்ற பொருளில்தான் அமைய முடியும். ஆணும் பெண்ணும் பண்புடன் அன்பை வளர்த்துக் கொண்டு, அதன் பரிணாம வளர்ச்சியில் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ்த்தி, அதன் விளைவாக, இரு மனம் ஒன்று சேர் தம்பதியாவதே சிறந்தது. அப்படிப்பட்ட வாழ்வுதான் ஆதரிச வாழ்க்கையாக அமையும். புரிகிறதா? இல்லையென்றால் இன்னமும் வெள்ளையாகச் சொல்லி விடுகிறேன்!"