பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 119



வாழ்க்கைக்கு ஒரு பொருள் - அர்த்தம் கிடைக்கிறது. ஏன், உங்களுக்கு ஆண்டவனைப் பிடிக்காதோ?"

"ஸார், ஸார்! என்னை நாத்திகத்தின் தலைவியாகக் கணித்து விடாதீர்கள். நான் ஆண்டவனை நம்பாமல் இருப்பேனோ? இருக்க முடியுமா? அவ்வாறு நம்பாது இருந்திருந்தால் நான் அல்லல்பட்டு, வெந்து நொந்து கடைசியில் என் ஆண்டவனைத் தேடி வந்திருக்க வாய்க்குமா?"

தவசீலி இப்போது ஞானசீலனைப் பார்த்தாள். ஆனால் இந்தப் பார்வையில் முன்பில்லாத ஒரு புது உரிமையும் நூதனமான உறவும் பொதிந்திருந்தன. தன் நெஞ்சிலும் நினைவிலும் கண்ணாம்பூச்சி ஆடிக் காட்டியவாறு இருந்த வாணியை அனுபவித்த நிலையில் இருந்த ஞானசீலனுக்கு இவளைப் பார்க்க வேண்டுமென்னும் சிந்தனை எங்ங்னம் ஏற்பட முடியும்? மனம் வாணியை எண்ணியது. ஆனால் மனத்தின் மனத்தில் தவசீலியின் சொற்கள் குகையில் கிளம்பும் எதிரொலியாக முட்டி மோதிக் கொண்டு புறப்பட்டன. "நான் தப்பித்தேன்!" என்று முத்தாய்ப்பிட்டார் அவர்.

பதட்டத்துடன் இடைமறித்தாள் கதாசிரியை. "ஏன், ஏதாவது விபத்து ஏற்பட்டதா ஸார்!"

"அப்படியெல்லாம் நல்ல வேளையாக எதுவும் நடக்கவில்லை. நீங்களும் என் மாதிரியாகவே ஆத்திக மனம் கொண்டிருப்பதை எண்ணிய எனக்கு, ஏதோ ஒரு விபத்தை எதிர்பார்த்து, உடனேயே அவ்விபத்து விலகிவிட்டதுபோல ஒரு சாந்தி உண்டானது. அவ்வளவு தான். ஆண்டவன் நல்லவன்."