பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


"ஆமாம் ஸார். ஆண்டவன் நல்லவன்; என் ஆண்டவன் இன்னும் நல்லவர்!" என்று பதிலிறுத்த அவள், ஓரக் கண்ணால் அவரை ஏறிட்டுப் பார்த்து, அக்கணமே, அவ்வாறு பார்ப்பதற்கு நாணம் பூண்டவளைப்போலத் தலையையும் விழிகளையும் தரையை நோக்கிக் குனிந்து சாய்த்தபோது, அவர் அவளைக் கண்டார். அவர் அவளது செழித்துப் பூரித்திருந்த அழகின் திரட்சி மேட்டைக் கண்டார். புலனறிவு பொறி கலங்கியது அவருக்கு.

அவள் தலையையோ, விழியையோ உயர்த்தவில்லை. அவர் மறுபடியும் பார்த்தார். அழகு இன்னும் கூடுதலான அழகைக் காட்டியது.

மேனியில் ரோமாஞ்சலி கிளர்ந்தெழுந்தது, உடலெங்கும் கொதிப்புணர்வு படர்ந்தது. மனோவிகாரம் அவருள் சுழிந்தது. "தவசீலி!" என்று அழைக்கப் பிரித்த உதடுகளிலே "வாணி!" என்ற பெயர் புறப்பட்டது.

தவசீலி துணுக்குற்றுத் திரும்ப வேண்டியவள் ஆனாள்.

ஆவி தழுவி நின்ற புல்லரிப்பைத் தட்டிக்கழித்து விட்ட பரிதவிப்பில் மனம் கலங்கிக் காணப்பட்ட ஞானசீலனின் நெஞ்சம் இளக்கம் கண்டது.

"தவசீலி, என்னிடம் சொல்ல வேண்டியதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லி விடுங்கள். சுற்றி வளைத்து நீங்கள் பேசினால், அதைப் புரிந்து கொள்ளக்கூடிய மனோநிலையில் நான் தற்சமயம் இல்லை; ஆமாம் தவசீலி!" என்று குரலில் அழுத்தம் பதித்து, அவ்வழுத்தத்தில் கண்டிப்பையும் ஏற்றித் தெரிவித்தார், ஞானசீலன்.