பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்



சம்மதிக்கிறேன். ஆண்டவன் மேல் ஆணை இது!" என்று முடித்தார் ஞானசீலன். சிரிப்பே வடிவமாகி நின்ற தவசீலியின் அழகு உணர்ச்சிச் சிரிப்பை அனுபவிக்கக் கூட முயலாமல், ஞானசீலன் தம் அறைக்குள் நுழைய அடியெடுத்தார். அப்பொழுது, குறுக்கே பாய்ந்து மேஜைமீது தாவியது பூனை ஒன்று. மறு வினாடியில் மேஜையை விட்டுத் தரைக்குத் தாவியது. சிறிய சீசா ஒன்று, சிதறிய உடைசல்களினூடே 'நஞ்சு' என்ற எழுத்துக்கள் செங்குருதித் திவலைகளாக உருக் கொண்டிருந்தன.

"அத்தான்!" என்று புதுச் சொந்தம் கொடுத்து ஓலம் பரப்பினாள் தவசீலி.

"தம்பி!" என்ற பழைய பாசம் கொடுத்து மன்றாடினாள் தாய்.

வாணியிடமிருந்து விம்மல் வெடித்தது.

கோதண்டபாணி வாயில் கைக்குட்டையை அழுத்தினார். o

ஞானசீலனுக்குக் கிறுகிறுப்பு ஏற்பட்டது. தரையில் சாயப் போனார். நல்லவேளையாகத் தவசீலி அவரைக் கைப்பிடியாகத் தாங்கிக் கொண்டாள். அவளும் தரையில் உட்கார்ந்தாள். அப்பொழுது, தன் பெயருக்கு ஒரு கடிதம் இருப்பதைக் கண்டாள். டாக்டருக்கு ஆள் அனுப்பி, ஞானசீலனைப் படுக்க வைத்து, அதன் பிறகு, அவள் அந்தக் கடிதத்தைப் பிரித்தாள்.

"தவசீலி !

என்னை ஆண்டவள் வாணி.

ஆனால், நான் அவளை ஆள முடியவில்லை.