பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


வேலைக்காரர்கள் ஷேக்கும் மணியும் சாப்பாட்டு விவரம் கேட்க வந்து, விடை கண்டு, திரும்பினார்கள். சிரிக்க வைக்கும் தோற்றத்துடன் ஓவியர் ஒருவர் வந்தார். “நான்தான் ஸார் மீனம்! ஜோக் போட்டிருக்கேன்!” என்று படங்களைப் பிரித்தார். சிரிப்பு ஏதும் பிரியாததால், பிரிய வேண்டியவர் ஆனார்.

மணி ஏழு-இருபது.

தம்புச் செட்டித் தெருவின் சுறுசுறுப்பு ஓயவில்லை.

இந்திரகுமார் என்ற இளைஞர் வந்தார். இழைந்த வேண்டுகோளின் பிரகாரம், சிதம்பரம் ஜெயராமனின் குரலைப் பாவனை செய்து பாடிக் காட்டினார். நெடுமாறன், பரமசிவம் போன்றோர் வந்தார்கள். இலக்கிய உலகம் தன்போக்கில் - தன் லயத்துடன் சுழலத் தொடங்கிற்று.

ஞானசீலனுக்குத் திடுதிப்பென்று அம்மாவின் ஞாபகம் வந்தது. ஒரு வாரமாக வந்து கிடந்த தபாலுக்குக் காலையில் பதில் அனுப்பியதை நினைத்தார். நான் பதில் போடுவதற்கு ஒரு நாள் தாமதமானாலும்கூட அவர்கள் அன்னம் தண்ணீர் விரும்ப மாட்டார்களே! அன்னை எனும் கடவுள் கொள்கையில் அவர் நீந்தினார். நீரின் அலைகளுடன் நெஞ்சின் அலைகள் போட்டியிட்டன.

ஒரு சமயம், ஞானசீலனின் தாய்க்கு உடல் நலம் நலிந்தது. அப்போது அவர் அன்னைக்கு அருகிலேயே இருந்த நேரம். “தம்பி! உன்னை மாலையும் கழுத்துமாகப் பார்க்கும் பாக்கியத்தை மட்டும் எனக்குக் கொடுத்திடப்பா! அப்பத்தான் என் நெஞ்சு வேகும்!” என்று நீர் தொடுத்து, நெஞ்சத்துக் கனவுகளையும் தொடுத்துப் புலம்பினாள்.