பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 15



"ஆகட்டும், அம்மா!" என்ற பதில் அவரிடமிருந்து வந்தது.

தாய்க்கு ஆனந்தம் வெடித்தது. அப்போதே தன் மைந்தனை மலர் முகமும் மலர் மாலையுமாக, பங்கய முகத்துப் பாவையவள் பக்கத்தே வீற்றிருக்கக் கண்டுவிட்டது போன்ற ஒரு குதூகலம்! இருக்கத்தானே வேண்டும்!

பெண்களின் பெயர்கள் சிலவற்றைப் பெற்றவள் ஓதினாள்.

"இந்த தஞ்சாவூரிலே சுசீலா ரொம்ப அழகான பொண்ணு, நம்ப பாம்பாட்டித் தெருவேதான். அப்பாரு போலீஸ் இன்ஸ்பெக்டராம் . மேல ராஜவீதியிலே கோமதின்னு ஒரு பொண்ணு இருக்கு. திருவாரூரிலே கமலாட்சின்னு ஒரு தங்கம் இருக்குது. ஆனா, ஒண்ணு! உன்னோட மாமன் மகள் மரகதத்தை மட்டும் நீ மறந்துப்பிடு..!" என்றாள்.

ஞானசீலன் தம்முடைய கதை ஒன்றைப் பற்றி எண்ணமிட்டார். அந்தக் கதையில், தாய் ஒருத்தி தன் பிள்ளையிடம், "தம்பி, நீ யாரையானும் காதலிக்கிறீயா, சொல்லு! அவளையே உனக்குக் கட்டி வைக்கிறேன்!" என்று கேட்கிறாள். இப்போது அந் நிகழ்ச்சி நினைவில் சரம் கட்டியது.

"தம்பி.!”

"அம்மா!..."

"பேச்சு மூச்சைக் காணலையேப்பா?"

"பேச்சுத்தான் அம்மா இல்லை. ஆனால் மூச்சு இருக்குதே அம்மா!"

பெற்ற மணி வயிற்றினின்றும் மாணிக்கக் கட்டிச் சிரிப்பு வெளிவந்தது.