பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


“உங்க இஷ்டப்படி செய்யுங்க, அம்மா!”

“கல்யாணம் என்கிறது ஆயிரம் காலத்துப் பயிரின்னு உன் அப்பா சொல்வாங்களே, மறந்திட்டியாடா? இதிலே, என இஷ்டம் முக்கியம் இல்லே. உன் விருப்பம்தான் முக்கியம். நான் இப்ப சொன்ன பெண்ணுங்க பேர் கிடக்கட்டும். உனக்குத் தெரிஞ்ச பெண்ணை யாரையும் நீ காதலிக்கிறதா யிருந்தாலும் சொல்லு. அந்தப் பெண்ணையே செய்து வைக்கிறேன்.”

ஞானசீலனுக்குத் ‘திக்’ கென்றது. ‘காதலா? காதல் என்றால் அர்த்தம் என்ன? எத்தனையோ காதல் கதைகளை எழுதித் தள்ளியிருக்கிற எனக்கா காதலைப் பற்றி விளங்கவில்லை...?’

அன்னையின் உடம்பு தேறிவிடவே, திருமணப் பேச்சை அப்படியே அந்தரத்தில் நிறுத்திவிட்டு, அவர் ‘போட்மெயி’லில் பட்டணத்துக்கு வண்டியேறினார்.

மாதம் ஒன்று முடிந்து விட்டதே! பச்சைப் பாலகனுக்குச் சிரிப்பும் அழுகையும் ஒன்றுதான். அது போலவேதான் மனத்தில் சிரிப்புக்குரிய நடப்புகளும் அழுகைக்குரிய நிகழ்ச்சிகளும் கொடிகட்டி - கொடி காட்டிப் பறக்கின்றன.

‘முன்னைத் தவமிருந்து முந்நூறு நாள் சுமந்து ஈன்ற தெய்வத்தின் முகத்தை நினைந்து, தரிசித்தார். பாக்கியம் இழந்த அவள் தனக்கென அனுபவித்த தொல்லைகளை அவர் எங்ஙனம் எடை கட்டிப் பார்க்க முடியும் அன்பும் பாசமும் எடை கடந்ததாயிற்றே! ‘அம்மாவைப் பார்க்கணும். கண்ணுக்குள்ளவே அவங்க முகம் நிற்குது!...’

அப்பொழுதே பறந்து தஞ்சையில் குதித்து, அம்மாவின் காலடியில் குதித்து விளையாட வேண்டும் போல ஒரு கோல வெறி கிளர்ந்தது!