பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


கிறேன். இதுவே என்னால் இயன்றது,’ என்று எண்ணிக் கொண்டே சுற்றுப்புறம் சுற்றிப் பார்வைச் சிதறல்களைச் சிந்த விட்டார் அவர். இமை முடிகளை முடிச்சிட்டு உறக்கம் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தது. என்றாலும், அவருக்குச் சுயஞாபகம் அதிகமாகவே இருந்தது. இதற்குக் காரணம், அவரது அன்னையே! ‘அம்மாவுக்கு உடம்புக்குச் சரியில்லை; அம்மாவுக்கு இப்போது எப்படி இருக்குமோ?’ என்ற கவலையின் ஆதங்கப் பொறிகள்தாம் அவருள் எரிப்புச் சக்தியை மூட்டிவிட உதவின. உடன் வந்த கோதண்டபாணி தூக்கப் பிரியர். ஜட்காவின் ‘கடமுடா’ சத்தத்தையோ, வண்டிக்காரன் வண்டிச் சத்தத்தைக் கூட்டிக்கேட்டுத் தன் தொண்டைச் சத்தத்தையும் நேர் விகிதாச்சார அளவில் கூட்டிப் போட்டுக் கத்திய நிகழ்ச்சியையோ அவர் அறியார். அவர் ஏன் அறிய வேண்டும்? ஆமாம், அறிய வேண்டாம்தான்.

ஜட்கா தன் லயத்துடன் ஓடிக் கொண்டேயிருந்தது.

மனம் தன் லயந்தன்னில் ஓடிக் கொண்டேயிருந்தது.

ஜங்ஷனைத் தாண்டியது வண்டி. ஆனந்தா லாட்ஜில் ஒரு நிமிஷம் நின்றது; ஒரு கப் காப்பி முடிந்தது. பிறகு, தஞ்சாவூர்த் தலையாட்டிப் பொம்மைகள், முந்திரிப் பருப்புக் குவியல்கள், குடமிளகாய்க் கும்பல்கள், வெட்டி வேர்ப் பூச்சரம், பழத்தினுசுகள் ஆகியவற்றிடமிருந்து விடை பெற்றார்கள். இர்வின் பாலம்; மணிக்கூண்டுடன் காந்திஜி சாலை பூர்த்தி, பாம்பாட்டித் தெருவுக்கு மடங்க வேண்டும். நியூ டவர், கீழவாசல் திருப்பம் போன்ற பகுதிகள் மோதி விலகின.

மோதி விலகாத பாசத்தின் அலைகளின் துணை கொண்டு வண்டியின் கம்பியை விடுவித்துக் கொண்டு முதலில் இறங்கினார் ஞானசீலன். கைப்பை கட்கத்தில்