பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


அதே வகைப்பட்ட உள்ளத் துள்ளல் இப்போது அடுத்தபடியாக அவர் நெஞ்சத்தில் முகிழ்த்தெழுந்தது.

“என் பெயர் தவசீலி!” என்று பான்மையுடன் பாங்கு மொழி உதிர்த்த பாவனையைப் புகழ்வதா?

“நீங்கள்தான் ஞானசீலன்; தமிழரசி பத்திரிகையின் உதவி ஆசிரியரென்று கருதுகிறேன்,” என்பதாகத் துணிவு பதித்து, புதுமனையில் பஞ்சுப் பாதம் பதித்துப் பேசிய மோகனமான லாகவத்தைப் போற்றுவதா?

“வணக்கம்,” என்று அஞ்சலி முத்திரை காட்டி, அஞ்சனமணி வண்ணக் கண்களிலே அஞ்சாத பாவத்தை எழுதிக் காட்டி, பண்புடன் நகை சிந்தினாளே, அந்தக் கோலத்தின் கோலாகலமான தொடர்பைப் பாராட்டுவதா?

மூன்று பிரிவுக் கேள்விகளுக்கும் உரைகல்லாக நிலவி நின்ற தவசீலியின் அழகு, அன்பு, துணிவு என்கிற மூன்று வகைக் குணநலக் கோணங்களை மாற்றுரைத்துப் பார்க்க அவருக்குப் பொழுது காணவில்லை. நேருக்கு நேர் பார்த்த நிதர்சன வடிவம் ஏதோ ஒன்றை நினைவூட்ட, அந்நினைவு, பட்டணத்தில் பறந்து வந்த கடிதத்தைத் தொட்டு நின்றது. உள்ளந் தொட்ட முடங்கலல்லவா அது? முடங்கிக் கிடந்த இனிய நல்லுணர்வில் தேக்கத்தலமாக அமைந்த அக்கடிதம், அவருடைய நெஞ்சத்தில் மீளவும் ஒருமுறை பிரதிபலித்தது. மீள வாய்க்காத அன்புச் சுழல் தன்னை ஆட்கொண்டு விட்டாற் போல அவர் துடித்தார்; தத்தளித்தார்; கடைசியில் அகமகிழ்வும் கொண்டார்.