பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 31


அடுத்த முப்பத்தைந்தாவது நிமிஷம் அங்கே ஓர் அதிசயம் பாய்விரித்து, அவரைக் குந்தச் செய்தது. புதிய பெண் ஒருத்தி வந்து "என் பேர் தவசீலி. நீங்கள்தான் ஞான சீலன், 'தமிழரசி' பத்திரிகையின் உதவி ஆசிரியரென்று கருதுகிறேன், வணக்கம்," என்று கைகூப்பி நின்றாள்!

5. பெண்மையின் கண்ணீர் அது

ஞானசீலனுக்கு ஒரு பழக்கம் உண்டு. கதைகள் எழுதுவதற்கு உண்டான மன உத்வேகம் எழுச்சி கொள்ளும் நேரத்தில் அவருடைய பேனா தன் போக்கில் ஓடிக் கொண்டே இருக்கும். ஓடிக் கொண்டிருக்கும் காலத்தின் கைப்பிடியில் சிக்காமல், கைப்பிடிப்பில் இழையும் பேனாவின் சுழிப்பில் சிக்கி, சிக்கல் ஏதுமின்றி எழுத்துகளை உருவாக்கும் பொழுது, அங்கங்கே விழுந்து சிதறியிருக்கும் அழகான சிந்தனை நயங்களையும், நெஞ்சை ஈர்க்கும் அற்புதமான முனைத்திருப்பங்களையும் மீண்டும் மனத்திற்குள்ளாகச் சன்னக்குரல் எடுத்துப் படித்து ரசிக்கும் சமயத்தில், அவரையும் அறியாத வகையில், அவரது மனம் ஆனந்தக் கடலாடுவது வழக்கம். அப்படிப்பட்டதொரு தனித்த மனப்பாங்கு எப்போதாவதுதான் அவருள் உருக்கொள்ளும். அவ்விதமான மனச் சந்துஷ்டி, அன்று அலுவலகத்திற்கு அவர் பெயருக்கு எழுதிய, முன்பின் அறிமுகமற்ற அந்தக் கதாசிரியையின் கடிதத்தைப் படித்த போது முதல் முறையாக ஏற்பட்டது.