பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


காட்டிலும், அந்தப் படைப்புத் தந்தையின் கலைஞானம் உயர்ந்ததாகி விட்டதா? அப்படியென்றால், படைப்புத் தொழிலில் நான் தோற்று விட்டேன் என்று அர்த்தமா?.’ உள்ளத்தெழுந்த தாழ்வுணர்ச்சியில் வெடித்த வேதனை ‘வல்வினை’யென வடிவெடுத்துப் புயலாய்ச் சீறியது.

“தம்பி, நான் ராத்திரி உங்கிட்டே சொன்ன பேச்சை நினைப்பிலே எழுதி வச்சுக்கப்பா. விடிகாலையிலேருந்து எனக்கு நல்ல சுரணை வரலே. இப்படியே ரொம்ப நாள் நீடிக்கும்னு எனக்குத் தோணலே. என் ஆசையை நீ புரிஞ்சுக்கிட்டே. உன் மனசைப் புரிஞ்சுக்கிடத்தான், நாலைஞ்சு பொண்ணுக படங்களையும் பேர்களையும் உனக்குக் காட்டிகிட்டிருக்கேன். பெரியவருக்கு என்ன பதில் சொல்றது?” என்று துருவிப் பேசினாள் அன்னை.

“மத்தியானம் சாப்பிட்டுப் போறதுக்குள்ளே ஒரு முடிவு செஞ்சுக்கிடலாம்,” என்று முத்தாய்ப்பு வைத்து விட்டு, மாடிக்கு விரைந்தார் ஞானசீலன். பட்டணத்தில் இருக்கும் பொழுது, வந்த அந்தக் கதாசிரியையின் கடிதத்தை எடுத்து வைத்து மறுமுறையும் படிக்கத் துடித்தார். அதே சடுதியில், வாணி கொடுத்த முகவரி யில்லாத கடிதத்தையும் திரும்பப் படிக்க வேண்டும் போல உணரலானார்.

இதற்கு ஊடே, ஞானசீலனைத் தேடிக் கொண்டு இலக்கிய ரசிகர்கள் கூட்டமொன்று முட்டியடித்துக் கொண்டு வந்து விட்டது. எல்லோருக்கும் காப்பி விநியோகம் அமர்க்களப்பட்டது. இலக்கிய சர்ச்சை காரசாரமாக நடந்தது.

முப்பது நிமிஷங்களை உண்ட மயக்கத்தில் காலம் எனும் தெய்வம் ஊமை நடை பயின்றது.