பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


சேமியா பாயசத்தை எவர்ஸில்வர் கரண்டியால் ஊற்றச் செய்தார்.

வாணிக்கு வேர்வை கொட்டியது.

சாப்பாடு முடிந்ததும், வெற்றிலைத் தட்டை எடுத்து வந்து வைத்துச் சென்றாள் வாணி. இந்தப் பெண்ணை ஜாடை மாடையாகப் பார்த்த விருந்தினர், “ஆமா, இது யாரு?” என்று கேட்க, “எங்களுக்கு வேண்டப்பட்டவங்க” என்ற பதிலை வீட்டுத் தலைவியிடமிருந்து வாங்கிக் கொண்டு, ஞானசீலனின் முகத்தையே ஓரக் கண்ணால் நோக்கியவராக வீற்றிருந்தார்.

ஞானசீலனுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. அவருக்குத் தன்னுடைய வேர்வை நெற்றியைத் துடைப்பதற்கே சரியாக இருந்தது. ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர் போல, இருக்கையைப் பிரிந்து எழுந்து, கூடத்திற்குள் நுழைந்தார். அவரைத் தொடர்ந்தாள் அவர் தாய். அவளிடம் அவர் சொன்னார்: “அம்மா! எனக்குத் திடுதிப்பின்னு எந்த ஒரு முடிவையும் சொல்ல முடியாது. என் ஒருவனைச் சுற்றிலும் இப்பைய நிலையிலே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் போட்டி போடுறாங்க. இந்தப் போட்டியை அன்புப் போட்டியாகவே மதிச்சு, அதுக்கு ஒரு வழி செய்யப் போறேன். இதைக் காதல் போட்டியாக்க எனக்கு மனசு ஒப்பமாட்டாது அம்மா. ஆனதாலே, அந்தப் பெரியவரோட விலாசத்தை எழுதி வாங்கிக்கங்க. இன்னும் பத்து நாளிலே தகவல் எழுதறதாச் சொல்லி அனுப்பிடுங்க” என்றார்.

அவ்வாறே அவளும் சொன்னாள்.

பெரியவர் மாசிலாமணி மாசில்லாத மணிச் சிரிப்பைக் கக்கிவிட்டு இருவரிடமும் விடைபெற்றார்.