பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

இன்றையத் தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் திரு. பூவை எஸ். ஆறுமுகம் ஒருவர் என்பதை எடுத்துச் சொல்லத் தேவையில்லை. மக்கள் விருப்போடு படிக்கும்படியுள்ள கற்பனையும் செந்தமிழும் குழைந்துள்ளது அவர் நடை. உமா பத்திரிகையில் தொடர் புதினமாக வெளிவந்த இதனை நூல் வடிவமாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

உலகிலே இதுவரை படைக்கப் பெற்றவைகளிலும், இனிப் படைக்கப் பெறுபவைகளிலும் மனிதனே தலை சிறந்த படைப்பு என்று ருக் வேதம் கூறுகின்றது. வேத முனிவர்களிலிருந்து ஒளவையார் திருவள்ளுவர் வரை மானிடப் பிறவியின் மேன்மையை உறுதி செய்துள்ளனர். ‘மனிதர்’ என்றால், ஆடவர் பெண்டிர் இருவரையும் குறிக்கும். இவர்கள் இருவருள்ளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில்தான் கஷ்டம் இருக்கிறது. ஆடவரையாவது ஓரளவு புரிந்து கொள்ளலாம், பெண்டிர் மனத்தை அறிவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அரிதாகவேயிருக்கிறது. அதை நமக்குப் புரியவைப்பதற்காக ஒவ்வொரு மொழியிலும் ஆயிர்க்கணக்கான நூல்கள் வெளிவந்துள்ளன. இந்தப் புதினமும் அவ் வுள்ளத்தில் ஒளி பாய்ச்சி நாம் அதில் சில பகுதிகளைக் கண்டு கொள்ளும்படி உதவுகின்றது.

உலகமுள்ளவரை இத்தகைய நூல்கள் வந்து கொண்டேயிருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

— பதிப்பகத்தார்