பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


டீயும் எழுது பலகையில் ‘நியூஸ் ப்ரிண்ட்’ காகிதக்கத்தையும் கண் இலக்கில் சிகரெட் நெருப்புப் பெட்டியுமாகக் குந்தி, குதிரைப் பந்தயக் குதிரைக்கு ஈடாக, கண்மூடிய வெறிக் கிளர்ச்சியுடன் ‘முசு முசு’ என்று எழுதித் தீர்ப்பது பழக்கம். மற்றவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நாட்டம்; இவருக்கு இலக்கிய மனத்தின் சுகத் தெளிவில் ஒட்டுதல். மறுநாள் அவர் அலுவலகத்திற்குச் செல்லுவார். முதல் முறை பத்திரிகை உரிமையாளர், அவரது செக்கச் சிவந்த கண்களைப் பார்த்துப் ‘பயந்து போய்’க் கேட்டார். விஷயம் பிடிபட்டது; வினயம் எடுபட்டது.

“உடம்பை முதலில் பார்த்துக் கொள்ள வேணும். நீங்கள் பிரம்மசாரி. முதலில் உடம்புதான் முக்கியம். உங்களது மனக்குகை ஓவியங்களை வரைய வேண்டுமென்றால், உடற் சுவரைக் கண்காணிப்புடன் பேணுதல் வேண்டுமல்லவா? இப்படி இனியும் இராக்கண் பகல்கண் விழிக்க வேண்டாம். தினம் பகுதி பகுதியாக உங்கள் தொடர் பகுதிகளை எழுதி விட்டால், சிலாக்கியமாக இருக்காதா, ஞானசீலன்? என்ன சரிதானே? அலுவலகம் ஒன்றுதானே நம் இருவருக்கும் இடையிலுள்ள ஒட்டுறவு என்று எண்ணிவிடக்கூடாது. அலுவலகத்துடன் ஒட்டுற வல்லாத விஷயங்களும் நட்புக்களும், எத்தனையோ நம்மைச் சுற்றி, அதாவது உங்களையும் என்னையும் சுற்றி இருக்கின்றனவே, அவற்றுடனும், வாய்ப்பு தேவைப்பட்டால், பழக்கம் வைத்துக் கொள்ள விரும்புகிறவன் நான். அதாவது, உங்கள் சொந்த வாழ்க்கையின் சுக துக்கங்களிலும் எனக்குப் பாகம் தர வேணும் என்று ஆசைப்படுகிறவன் நான். என்ன, சரிதானே?”