பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


பாரத ஜோதி நேருஜி, ராஜாஜி, வங்கக் கவி, நேதாஜி போன்ற பலதரப்பட்ட செம்மல்களின் புகழ்ச்சிக்குரிய தொண்டுகளைக் கரும்புக் கணுக்களைச் சுவைப்பது போல ரசித்துக் கொண்டே, இருக்கையில் அமரலானார். மேஜை மீது படுக்கை வசத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடித் தகட்டில் தெரிந்த முகத்தை ஒரு முறை கூர்ந்து நோக்கினார். கையிலிருந்த கோப்பையை வைத்தார். மீண்டும் ஏதோ சிந்தனை சூழ, ஓர் அரைக் கணப் பொழுதை நழுவ விட்டார். பிறகு, நாற்காலியில் கிடந்த கைபிடித் துணியினால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். அன்றையக் கடன் நினைவில் எழுந்தது. தோல் பையைப் பிரித்தார். கனம் ஏறியிருந்தது பை. ஊரிலிருந்து வந்ததிலிருந்து, அவர் நினைத்துக் கொண்டிருந்தபடி, அந்தப் பையின் கனத்தைக் குறைக்க நேரமில்லை. எழுத வேண்டுமென்று எடுத்த தாள்களை வெளியே எடுத்து வைத்தார். பிள்ளையார் சுழி போடப் பட்டதுடன் சரி, இதழ்வரை இடைவேளை இருந்தது. ஆகவே, அவருக்குப் பதட்டம் ஏற்படக் காணோம்! நல்லதுதானே!

எதிர்ச் சிறகிலிருந்து சிறகு கட்டிப் பறந்து படர்ந்து வந்தது காலை வெய்யில்.

பையன் கெட்டிக்காரன் ஆயிற்றே! லாகவமாகக் கதவை ஒருக்களித்து மூடினான்.

ஞானசீலனின் முகச் சுழிப்பையும் சேர்த்து மூடியதாகவே பொருள்.

ஞானசீலன் மணியை அழுத்த முனைந்தார்.

சத்தம் பிறப்பதற்குள், ராதாவின் குரல் பிறந்தது. “ஐயா, காப்பி வேணுமா? இல்லே, நம்ம ஆனந்தன் அண்ணாச்சியைக் கூப்பிடட்டுமா? இல்லே, அது...” என்று