பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ❖ 65


‘வாணி, உன் பதிலுக்காகவே நான் காத்திருக்கிறேன். உன் மனம் விரும்பிய பிரகாரமே, என் மனமும் விரும்பிய வித்தையை நாம் இருவரும் கூட்டாகப் பின்னர் ரசிப்போம். விதியை விட்டு விலகிவிட மனிதனால் முடியாது. மனிதன் விதியின் ஒரு கருவி. இந்தக் கொள்கைக்கு நம் இருவரிடையிலும் நிகழப் போகின்ற பந்தபாசமே ஆதாரக் கொள்கையாகி விடும் இல்லையா, வாணி? என் எழுத்தை ரசித்த நீ என்னையும் ரசிக்கப் போகிறாய்! இல்லையா, வாணி? உன் எழிலை ரசித்த நான் உன் எழுத்தையும் ரசிக்கப் போகிறேன்! இல்லையா, வாணி? நம் காதற்கனவு ஈடேறப் போகிறது. இல்லையா வாணி!’

குளித்து, பலகாரம் சாப்பிட்டுவிட்டு, ஆபீசுக்குப் புறப்பட ஆயத்தமானார் ஞானசீலன். விரிந்து கிடந்த புத்தகங்களை ஒழுங்கு படுத்தியபோது, ‘விவேகம் வளருமுன்னே விவாகம் கூடாது! விவேகம் வந்த மனம் விவாகத்தை நாடாது!’ என்ற பத்திரிகைத் துணுக்கு ஒன்றை ரசித்துச் சிரித்தபடியே புறப்பட்டார்.

12. மாரியம்மன் துணை

கூர்க்காவுக்குப் பதில் வணக்கம் சொல்லியானதும், மாடிக்கு விரைந்தார் ஞானசீலன். வழக்கம் போலவே, அலுவலக நண்பர்கள் வணக்கம் சொன்னார்கள். அவர் கையை உயர்த்தி வணங்கிய பின், சுற்றிலும் பார்த்தபடி தமது தனியறைக்குள் நுழைந்தபோது, நெஞ்சில் நுழைந்து இடம் பற்றியிருந்த மேதைகளின் படங்களை உள்ளக் கிழியில் ஓவியமாக்கிப் பார்த்தார். தமிழ்த் தென்றல், சிலம்புச் செல்வர், நாமக்கல் கவிஞர், தமிழகக் காந்தி,

தி.சொ.நி.-5