பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


மான உத்வேகம் அவ்வப்போது எழுவது இயல்பு. அத்தகைய உணர்வின் விழிப்பு அவரைச் சாட்டை கொடுக்கச் செய்தது. அது தருணம் அவர் கண்கள் கலங்கி வந்தன. மனம் மெய்ப்பாடு உணர்ந்த லயிப்பிலும் லயத்திலும் கும்மாளம் போட்டு, ஆன்றவிந்து அடங்கிய பக்குவம் அடைந்தது.

பேனாவை உதறிக் கொண்டு எழுதத் தொடங்கினார் அவர். அப்பொழுது, வாணியின் வதனம் அவரது விழித்த இலக்கிய நெஞ்சத்தில் நிழலாட, நிழலோடத் தொடங்கியது. வாணியையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று கொண்டுவிட்ட தம்முடைய முடிவைப் பற்றியும் எண்ணமிட்டார். அப்பொழுது தம் முதலாளியைத் திரும்பவும் மனத்தில் நிறுத்த வேண்டிய நிலை நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஒரு வார காலமாகத் தாம் தம் முதலாளியிடம் பட்டும் படாமலும் ஒழுகி வரும் இக்கட்டானதொரு சட்டத்தையும் எடைபோட்டுப் பார்த்துக் கொண்டார். வாணியைப் பற்றி உருவான ஒரு முடிவில், தம் எழுத்துத் துறைக்கு ஏற்ப, தாமே ஏற்படுத்திக் கொள்ளப் போவதாக முடிவு கட்டிக் கொண்ட ஒரு முடிவும் கண்டதோ:

ஹார்பர் சங்கு ஒலித்தது.

மணி எட்டு.

அலுவலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள் ‘லாட்ஜ்’ நண்பர்கள்.

ஞானசீலனுக்குக் கதையில் சிந்தனை பதிந்தால் தானே? அவரது சித்தமிசை குடிகொண்ட வாணி யல்லவா அப்போது அவரைத் தன் வயப்படுத்திக் கொண்டிருந்தாள்.