பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ❖ 63


இப் போக்கை நான் என்றுமே ஆதரித்தது இல்லை; அனுமதிக்கவும் விரும்பேன். உங்கள் தீர்ப்பு எனக்குச் சாதகமாக இருக்குமென்பதே என் நம்பிக்கை. மற்றதெல்லாம், ஆண்டவன் சித்தம். நம் சித்தங்களுக்குச் சித்தம் வைக்கும் முதல்வன் அவன். அவன் விளையாட்டுப் படிதானே சகலமும் உலகத்திலே நடக்கிறது? என்று பவ்யமாகப் பேசி அனுப்பியதை ஞானசீலன் மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்தார்.

எழுதுவதற்கு உரிய மன லயிப்பை உண்டாக்கிக் கொள்ள முயன்று கொண்டிருந்தார், ஞானசீலன். பூசாரி உடுக்குக் கொட்டி, சாம்பிராணி தூபத்தை மோப்பம் பிடித்து, காளி உச்சாடனத்தைக் கைப்பற்ற முனைவதுண்டல்லவா, அது போல்! அன்றைய காலைப் பத்திரிகை ‘ஹிந்து’ அவர் பார்வைக்காகக் காத்திருந்தது. வென்றவர்களை ஏசியிருந்த கலைஞரின் அமத்தலான பேச்சைப் பற்றிப் படித்துவிட்டு, பிரிட்டிஷ் பிரதமரின் அழுத்தமான அயல்நாட்டுக் கொள்கையைக் குறித்து வந்திருந்த குறிப்பையும் பார்த்தார். நடந்த பொதுத் தேர்தலில் பொதுமக்கள் நிரூபித்துக் காட்டிய நாட்டுப் பற்றைப் போற்றிய நேருஜி-காமராஜரின் வடக்கு-தெற்கு பேச்சுக்களை ஒருமுனைப்படுத்திய மூளைத் தெளிவுடன் - படித்தார். பிறகு என்ன தோன்றியதோ, விசுக்கென்று, ‘தமிழரசி’ இதழின் முந்திய ஏட்டில் தம்முடைய வளர்கதை வளராமல் நின்றிருந்த இடத்தைப் பார்த்தார். எண்ணங்களுக்கு வல்லமை தரும் பராசக்தி பாரதியாருக்குக் கிட்டினாரல்லவா? அம்மாதிரி ஞானசீலனுக்குச் சக்தி உச்சாடனமோ, தேவி உபாசனையோ எதுவும் இருக்கவில்லை, என்றாலும், அவருள் ஓர் அமானுஷ்ய