பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ❖ 95


கோசலை அம்மாள் சொன்னாள்:

“இப்ப எங்க பையன் எவ்வளவோ பரவாயில்லையே. முன்னாடி அவரு இருக்கிறப்ப, இதைப் பார்த்தா எனக்கே சமயா சமயத்திலே கொஞ்சம் அருட்டிதான். ஏன்னா சொல் பொறுக்காத தம்பி இது. ‘ஊம்’னா போதும், மனசுக்குத் தப்பா பட்டதுன்னா போதும், வீடு குருக்ஷேத்ரம்தான் போங்களேன். சலனமும் சாந்தியும் தம்பிக்கு சர்வ சாதாரணம். தேசம் தேசம்னு பித்தாயிருந்தார். இது கதை கதைன்னு படிச்ச பட்டத்தை ஆலாப் பறக்க விட்டுப்புட்டு அவதிப்பட்டுக்கிட்டு இருக்கிறது. ஊம், எல்லாம் எங்க வாணி வந்திட்டால், சீலன் திருந்திடும் கட்டாயமாய்! வாழ்க்கை என்கிறது ஒரு யுத்தம்னு சொல்லுவாங்க. அதனாலேதான் போல நம்பளோட சுகதுக்கத்துக்கு உண்டான அளவை வழங்கக் கூடிய ரேஷன் கார்டைப் பகவான் தன் வசம் வச்சுக் கிட்டிருக்கிறாரோ என்னமோ..?”

ஞானசீலன் நிலைப்படியைத் தாண்டினார். அதனால் மெல்லரவம் எழுந்தது.

“வாணி அம்மாடி வாணி!” என்று குரல் கொடுத்தாள் அம்மா.

“நான்தான் அம்மா!” என்று நயமாகச் சொல்லி முடித்து மாடிக்கு விரைந்தார். முற்றத்தில் விழுந்திருந்த பால் நிலவுக் கதிர்கள் மாடிப்படிகளை முத்தமிட்டுக் கொண்டிருந்தன. நுழைவாயிலின் ஓரத்தே வைக்கப்பட்டிருந்த ரேடியோவை ‘ட்யூன்’ பண்ணினார். அவர் மனம் பாட்டில் லயிக்கவில்லை. குரிச்சியில் சாய்ந்தார். ‘அம்மா ரொம்பவும் கனகச்சிதமாக என்னைப் படித்து வைத்திருக்காங்க!...’