பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

41


ஐந்து திருமுகங்களினின்றும் தோன்றிச் சுத்தவித்தியா தத்துவத்திலுள்ள சதாசிவனால் அநந்தருக்கும் அவரால் ஸ்ரீகண்டருக்கும், அவரால் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அவர்களால் மனிதருக்கும் மனிதரால் மனிதருக்கும் ஆக உபதேச முறையில் உலகிற் பரவுவன எனவும், முற்குறித்த இருபத்தெட்டு ஆகமங்களுள் முதற் பத்தும் ஒரு மலமுடையராய விஞ்ஞானகலருள் பரமசிவனது அருளைப்பெற்ற பிரணவர் முதலிய பத்துச் சிவன்களுக்கும் அருளிச் செய்யப் பெற்றமையால் சிவபேதம் எனவும், ஏனைய பதினெட்டும் பரமசிவன்பால் உபதேசம்பெற்ற அனாதிருத்திரர் முதலிய பதினெட்டு உருத்திரர்களுக்கும் அருளிச் செய்யப்பெற்றமையால் உருத்திரபேதம் எனவும் கூறுவர்.

வேதம் ஆகமம் என்னும் இருவகை நூல்களுள் வேதம் உலகர்க்கும் சிவாகமம் திருவருட்பேறுடைய பக்குவர்களுக்கும் ஆக இறைவனால் அருளிச் செய்யப் பெற்றமையால் உலகியல் ஒழுக்க நூலாகிய வேதத்தைப் பொது எனவும் சிவநெறியின் சிறப்புணர்த்தும் சிவாகமத்தைச் சிறப்பு எனவும் கொள்வர் பெரியோர். ‘உலகியல் வேத நூலொழுக்க மென்பதும், நிலவு மெய்ந்நெறி சிவநெறிய தென்பதும்’ என வரும் சேக்கிழார் வாய்மொழியால் இவ் வுண்மை புலனாம். இனி வைதிகருள் ஒரு சாரார் வேதத்தை மட்டும் பிரமாணமாகக் கொண்டு ஆகமத்தைப் பிரமாணமாகக் கொள்ளாது நெகிழ்ந்து போவர். வேதம் சிவாகமம் என்னும் இருதிற நூல்களையும் அருளிய முதல்வன் ஒருவனே யாதலின் வேதம் சிவாகமம் இரண்டையும் ஒருங்கே பிரமாணமெனக் கொண்டு திருமூலநாயனர் இத் திருமந்திரமாகிய செந்தமிழ் ஆகமத்தை அருளிச் செய்துள்ளார். வேதம், சிவாகமம் என்னும் இரு திற நூல்களையும் அருளிச் செய்த முதல்வன் சிவபெருமான் ஒருவனே எனவும், வேதம் முதல் மூன்று வருணத்தார்க்குரியது