பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

திருமந்திரம்


சிவாகமம் நான்கு வருணத்தார்க்கும் உரியது எனவும், பஞ்சப்பிரமம் பிரணவம் பஞ்சாக்கரம் பிராசாதம் முதலிய மந்திரங்களும், பதிபசுபாசம் முதலிய பொருள் வழக்கமும், திருநீற்றின் உத்தூளனம் திரிபுண்டரம் உருத்திராக்கம் தரித்தல் சிவலிங்க பூசை முதலிய ஒழுகலாறுகளும் வேதம் சிவாகமம் இரண்டினும் ஒப்பக்காண்டலால் அவ்விரண்டும் பிரமாணமேயாம் எனவும் ‘யாம் வேதத்திற்கும் சிவாகமத்திற்கும் வேற்றுமை கண்டிலம்’ எனவும் நீலகண்ட சிவாசாரியார் கூறும் தெளிவுரை திருமூல நாயனார் அருளிய மெய்யுரையை அடியொற்றி யமைந்துள்ளமை உணர்ந்து போற்றத் தகுவதாகும்.


15. மாரியுங் கோடையும் வார்பனி துரங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய முந்தமி ழும்உடனே சொல்லிக்
காரிகை யார்க்குக் கருணை செய்தானே. (65)

சிவபெருமான் உமையம்மை முதலியோர்க்கு அருளிய ஆகமங்கள் ஆரியம் தமிழ் என்னும் இருமொழிகளிலும் அமைந்துள்ள திறத்தை எடுத்துரைக்கின்றது.

(இ-ள்) (வானம் பொழிதற்குரிய) கார்காலத்திலும் கடுவெயிற் காலத்திலும் (உயிர்கட்கு வெம்மை விளைவிக்கும்) நீண்ட பனித்துளியே சொரிய நிற்றலால் (பயிர்வளர நீர் பாயும்) ஏரியும் மழைநீர் வரவு தடைப்பட்டமையால் (உலகவுயிர்கள் பசியினாலும் பிணியினாலும்) வாட்டமுற்று வருந்தும் அல்லற்காலத்தில் அழகே யுருவாகிய உமையம் மையார்க்கு ஆரிய மொழியிலும் தமிழ் மொழியிலும் (உலகர் நலம்பெறுதற் குரிய இனிய) பொருளுரைகளை உபதேசித்து மன்னுயிர்க்கு அருளை நல்கினன் (சிவபெருமான்). எ-று.