பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

திருமந்திரம்


இல்லையாகிய தமது பழைய உடம்பினை. இறைவனது அருளுக்கு உரியதல்லாத அப்பழைய உடம்பு நாட்டிற்கு எத்தகைய பயனையும் தாராது என்பார், ‘நந்தி அருளா அது நாட்டில் என் செயும்?’ என வினவினர். இறைவன் உயிர்கள் உய்திபெறுதற்குரிய நன்னெறியினை உள்நின்று உணர்த்த மூலனுடம்புடன் கூடித் திருவாவடுதுறையிற் படரரசின் கீழ்ச் சிவயோகத்து அமர்த்திருந்தேன் என்பார், நந்தி வழிகாட்ட நான் இருந்தேனே என்றார்.

18. நந்தி யிணையடி நான்தலை மேற்கொண்டு
புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய்
தந்தி மதிபுனை அரனடி நாள்தோறும்
சிந்தைசெய் தாகமஞ் செப்ப லுற்றேனே. (73)

திருமூலர் இறைவன் திருவருள் வழிநின்று தாம் தமிழாகமம் செய்யத் தொடங்கிய செய்தியினை எடுத்துரைக்கின்றார்.

(இ-ள்) நந்தியாகிய குருவின் இரண்டு திருவடிகளையும் தலைமேற்கொண்டு அத் திருவடிகளைப் புந்தியின்கண்ணும் புகுந்து நிலைபெறச் செய்து போற்றித் துதித்து அந்திக் காலத்துத் தோன்றும் பிறையினை (ச்சடையில்) அணிந்த சிவபெருமானுடைய திருவடிகளை நாள்தோறும் சிந்தித்து (ச்செந்தமிழ்ச்சிவ) ஆகமமாகிய இத் திருமந்திர மாலையைச் சொல்லத் தொடங்குகின்றேன். எ-று.

நந்தி என்றது, சிவனாகிய குருநாதரை. புந்தி-புத்தி. அந்திமதி-மாலைக்காலத்துத் தோன்றும் பிறைமதி.


19. சேர்ந்திருந் தேனசிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலிற்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. (79)