பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

57


நாற்றம்’ என்று கூறப்படும் தன் மாத்திரைகள் வேறு, விடயங்களாக இங்குச் சொல்லப்பட்ட சத்த முதலியன வேறு என்பதனைச் சிவஞான முனிவர் பேருரையில் விளக்கியுள்ளார். உலகப் பொருள்களிற் செல்லும் சத்தம் முதலிய ஐம்புலன்களையும் அடக்கி அறிவினால் அவற்றை விட்டு நீங்கிய நிலையில் சடப்பொருளாகிய உலகத்தோடு ஆன்மாவுக்கு உள்ள தொடர்பு அறுபட்டமையால் அந் நிலையிற் சித்துப் பொருளாகிய இறைவனே அவ்வுயிர்க்கு ஆதாரமாய் நின்று அவ்வுயிரைத் தாங்கிக் கொள்வன் என்பார் ‘சத்தம் முதல் ஐந்தும் தன்வழித் தான் சாரில் சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ’ என்றார். தன் என்றது ஆன்மாவை. தான்-அசை. தன்வழிச் சேர்தலாவது உயிரறிவிற்கு அடங்கித் தம் செயலறுதல். சித்து-அறிவுடைப்பொருள்; முன்னது உயிர், பின்னது இறைவன். ஒருவர் ஏறியிருந்து ஆடுதற்கு ஆதாரமான ஊசலின் கயிறு அறுந்தால் அவர்க்கு உற்றுழியுதவும் தாய்போல் நின்று தாங்கிக்கொள்வது எல்லாவற்றுக்கும் ஆதாரமாகிய நிலமேயன்றிப் பிறிதில்லை. அது போல இவ்வான்மா தன்னைச் சடமாகிய ஐம்புலன்களின் வேறாக அறிந்து அவற்றின் வழியொழுகாது அவற்றை நீங்கி யொழுகவே தமது முதல்வனாகிய இறைவனது திருவடியை யணையும் என்பார், இனி, “இவ் வான்மா தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே தமது முதல் சீபாதத்தை அணையும்” என்றது “ஊசல் கயிறற்றால் தாய்தரையே யாந்துணையான்” என விளக்குவர் மெய்கண்டதேவர். ‘பாதத்து அறுகயிறூசலானேன்’ என வரும் அப்பர் அருள் மொழியும் இங்கு நினைக்கத் தகுவதாகும். அண்டப்பரப்பிலுள்ள ஞாயிற்றின் வியாபகத்தில் ஏனைய சுடரொளிகள் அடங்கி யொற்றித்து நிற்றல்போல, இறைவனுடைய வியாபகத்தில் ஆன்மாவினறிவு அடங்கி நிற்கும் என உவமை கூறி விளக்குவார் ‘சுத்த வெளியில் சுடரில் சுடர் சேரும்’ என்றார்.