பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

69


(இ~ள்) தமக்கு விருப்பமான உணவினைச் சமைக்கச் செய்து வைத்தார். அத்தகைய உணவினை ஆரவுண்டார். இளமை பொருந்திய மனைவியாருடன் அன்பினால் அளவளாவினார். (மார்பின்) இடதுபக்கத்திலே சிறிது வலிக்கின்றது என்று சொன்னார். கீழே நீட்டிப் படுத்தார். படுத்தவர் மீள எழுந்திராது கிடந்தவாறே உயிர் நீங்கி யொழிந்தார். எ-று.

அடுதல்-சமைத்தல். அடிசில்-உணவு. மடக்கொடியார் - இளமை பொருந்திய மனைவியார். மந்தணங் கொள்ளல்-தனிமையிலிருந்து அளவளாவி மகிழ்தல். இடப்பக்கம்-நெஞ்சின் இடம். இறை-சிறிது. கிடக்கப்படுத்தல்-மீள எழும் நிலையின்றிப் படுத்த படுக்கையிலே கிடக்குமாறு நோயில் விழுதல். கிடந்தொழிதல்-அவ்வாறு படுத்த படுக்கையிலேயே உயிர் விடுதல்.

‘நெருநல் உளனொருவன் இன்றில்லை’ என்னும் நிலையாமையை விடச் ‘சிறிது நேரத்திற்கு முன் நல்ல நிலையிலிருந்து உணவருந்தி உரையாடி மகிழ்ந்தார், இப்பொழுது தான் படுத்தார், அதிர்ச்சி யெதுவுமின்றி இன்னுயிர் பிரிந்தது’ என்னும் இந் நிகழ்ச்சியில் நிலையாமையின் ஆற்றல் நன்கு புலனாதல் காணலாம்.


34. வளத்திடை முற்றத்தோர் மாநில முற்றுங்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தாலவை யோடென்று வைப்பர்
உடலுடைந்தால் இறைப் போதும் வையாரே.

யாக்கையின் நிலையாமை யுணர்த்துவார் அதன் தூய்மையின்மையையும் உடனுணர்த்துகின்றார்.

(இ ள்) படைத்தற் கடவுளாகிய குயவன் வளப்பமான இடையாகிய முற்றத்திலுள்ள கருப்பையாகிய குளத்-