பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

77


அங்கத்தை மண்ணுக்காக்கி யார்வத்தை யுள்ளேவைத்துப்
பங்கத்தைப் போகமாற்றிப் பாவித்தேன் பரமாவுன்னைச்
சங்கொத்த மேனிச்செல்வா சாதல்நாள் நாயேனுன்னை
எங்குற்றா யென்றபோதால் இங்குற்றேன் என்கண்டாயே.

என அப்பரடிகளும்

‘இருளைத் துரந்திட் டிங்கே வாவென் றங்கே கூவும்
அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாயம்மானே’

‘நின் மலரடிக்கே கூவிடுவாய்’

என மாணிக்கவாசகரும் அருளிய பாடல்கள் இறைவன் கூவுந்துணையாதலை விளக்குவனவாகும்.

ஆமே என்புழி ஏகாரம் எதிர்மறை. இனி விரிவு செய்தல் என்பதற்கு நல்லறங்களாற் பலர்க்கும் பயன்படச் செலவு செய்தல் எனப்பொருள் கொண்டு ஆமே என்பதன் ஏகாரத்தைத் தெற்றேகாரமாகக் கொள்வதும் உண்டு.

இளமை நிலையாமை

39. கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெருதாய்ச் சிலநாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே. (177)

இளமை நிலையாமை கூறுகின்றது.

(இ-ள்) நாட்காலையில் கீழ்த் திசையிலே இளமைச் செவ்வியுடையதாய் எழுந்து விரைந்து மேற்சென்ற கதிரவன் (நண்பகலில் இளமைத்தன்மை நீங்கிப் பின்னர் முதுமை எய்தி) மேற்றிசையிலே வீழ்ந்து மறைதலைக் கண்ணாரக் கண்டிருந்தும் ‘இளமையின் எழுச்சி என்றும்