பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104


விளைவிக்கும் நோக்குடன் நீரையும் நிலத்தையும் ஒரு வழிக்கூட்டி வளம்பெறச் செய்தவர்கள், இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவர் எனப் பாராட்டப் பெறுவர். இவ்வுண்மை,

'நீரின்றி யமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே,
நீரும் நிலனும் புணரியோர் - ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே.'

எனக் 'குடபுலவியனார்' என்னும் புலவர் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிய புறநானூற்றுப் பாடலில் தெளிவாக விளக்கப் பெற்றுள்ளமை காணலாம்.

வறியோராகிய மக்கள் உணவு பெறாது பசித்தீயால் வாட்டமுற்ற போது பொருளுடைய செல்வர்கள், அவர்களுக்கு வேண்டும் உணவு அளித்து அவர்தம் பசித்தீயைத் தணிவித்தல் வாழ்வியல் அறமாகும். பொருளை ஈட்டியவர்கள் தாம் ஈட்டிய பொருளைச் சேமித்து வைக்கும் நிதிக்களமாக (வங்கி)த் திகழ்வது, பசி தீர்த்தலாகிய அவ்வறமேயாகும். இவ்வுண்மையினை,

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி.

எனவரும் திருக்குறளில் திருவள்ளுவர் விளக்கியுள்ளமை காணலாம். (அற்றார் - பொருளற்றாராகிய வறியவர்கள்).