பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105


உயிர்களின் பண்பு நலன்களும் கருவி கரண இயக்கங்களும் அழிய உயிர்க்கு இறுதி தரும் நிலையில் வருவது பசி நோயாதலால் 'அழி பசி' என்றார் திருவள்ளுவர்.

'குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாணணி களையு மாணெழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி யென்னும் பாவி - '

எனவரும் மணிமேகலைத் தொடர் மேற்குறித்த 'அழி பசி' என்னும் திருக்குறள் தொடருக்குரிய விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.

மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை,
தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை, தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் - பத்தும்
பசிவந்திடப் போம் பறந்து.

எனவரும் ஒளவையார் வாய் மொழியும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. பசி நோயானது, இவ்வுடம்பின் உள்நின்று உயிர்களின் ஞான ஒழுக்கங்களை யழித்து அதனால் இனிவரும் உடம்புகளுக்கும் துன்பம் செய்தலின் 'பசியென்னும் தீப்பிணி' என்றார் திருவள்ளுவர்.

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது.

என வரும் திருக்குறள், உணவுண்ணப் புகுவோர், தம்மையடுத்த ஏழை எளியவர்களின் பசித்தீத் தணியத் தம்மிடத்துள்ள உணவுப் பொருளைப் பகுத்தளித்து உண்ணுதல் வேண்டும் எனவும், அவ்வாறு வறியவர்க்குப் பகுத்