பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129


இறுதி விளைப்பதாகிய பசிப்பிணியின் கொடுமையினையும் அற்றார் அழிபசி தீர்த்தலாகிய நல்லறத்தினை மேற்கொண்டு செய்வோர் அடைதற்குரிய பெரும் பயன்களையும், வறியோரது பசிதீர்த்தலாகிய அறத்தினைச் செய்யாது மக்கள் மேற்கொள்ளும் அறச் செயல்களும் தீர்த்தயாத்திரை முதலிய கடவுள் வழிபாடுகளும் எத்தகைய பயனையும் தரமாட்டா என்பதனையும் மக்கள் உள்ளத்தில் பதியும்படி அறிவுறுத்தும் மெய்ம் மொழிகளாக அமைந்துள்ளன. இவ்வாறு வறியோரது பசிப்பிணியை மாற்றுதலின் இன்றியமையாமையை எல்லோர் உள்ளத்திலும் நன்கு பதியும்படி தெளிவாக வற்புறுத்திய அருளாளர் அருட்பிரகாச வள்ளலார் ஒருவரே எனக் கூறுதல் மிகவும் பொருத்தமுடையதாகும்.

அருளறத்தின் திருவுருவாய்த் தோன்றிய அடிகளார் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் உளம் நைந்து வாடினார். பசியினால் இளைப்புற்று வீடு தோறும் இரந்து பிச்சையேற்றும் பசிநோய் தணியப் பெறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் வெதும்பினார். நீங்காத நோயால் வருந்துவோரைக் கண்டு உளம் வருந்தி மருந்தளித்துப் பிணிதீர்த்தார். உலகில் ஏழை மக்கள் பசியால் வருந்துகின்றார்கள் என நண்பர்கள் சொல்லக் கேட்ட போதெல்லாம் உளம் பகீரெனத் துடித்தார். மானமுடையராய்ப் பிறர்பால் இரந்துண்ண மனமின்றி ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர்களைக் கண்டு இளைப்புற்றார்.

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்