பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140


மதிக்கத் தக்கார் அல்லர் என்பது அருட்பிரகாச வள்ளலாரது திருவுள்ளக் கருத்தாகும். இக்கருத்தினை அடிகளார் தம் குருவின் மேலும், தம்மை ஆட்கொண்டருளிய இறைவன் மேலும் ஆணையிட்டுக் கூறுகின்றார்.

மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்திற்
கண்விழித்து வயங்கும் அப்பெண்
உருவானை யுருவாக்கி இறந்தவரை
எழுப்புகின்ற உறுவ னேனும்.
கருவாணை யுற இரங்காது உயிருடம்பைக்
கடிந்துண்ணுங் கருத்தனேல் எம்
குருவாணை எமது சிவக் கொழுந்தாணை
ஞானியெனக் கூறொணாதே

(திருவருட்பா 3027)

என்பது அடிகளார் கூறும் ஆணைமொழியாகும். தன்னிடத்தில் வந்த ஆண்மகனைப் பெண்ணாக மாற்றிக் கண்மூடித் திறப்பதற்குள் அப்பெண்ணை அழகிய ஆணுருவாக மாற்றவும், இறந்தோர்களை உயிர்பெற்றெழுமாறு செய்யவும் வல்ல அற்புதச் சித்தித் திறம் பெற்ற முனிவனாயினும், உயிரின்பால் சிறிதும் இரக்கமின்றிக் கரிய இரும்பினாலாகிய வாளினால் நையும்படி அவ்வுயிரின் உடம்பைத் தடிந்து உண்ணுங் கருத்துடையனாயின் அத்தகைய இரக்கமற்ற கொடிய நெஞ்சினனாகிய அவனை ஞானியெனக் கூறுதல் ஒண்ணாது என்பதனை எனது குருவின் மேலும் என்னுயிர்க்குயிராந் தெய்வமாகிய சிவபரம்பொருளின் மேலும் ஆணையிட்டு உறுதி கூறுகிறேன் என்பது மேற்குறித்த திருப்பாடலின் பொருளாகும்.

மக்களிற் பெரும்பாலோர் புலால் உண்ணும் பழக்கத்தினை எளிதிற் கைவிட்டு நீங்கும் ஆற்றலற்ற