பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190


யாரும் 'சிந்தைதனை மயக்கத் தீர்க்கும் ஏரொளி' என அப்பரடிகளும் 'இரந்திரந்துருக என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே' என மணிவாசகப் பெருமானும் அருளிய வண்ணம் ஆன்மாக்களின் அகத்தே தோன்றும் உள்ளொளியைக் கண்டு மகிழ்தலாகிய அருளநுபவத்தை எல்லோரும் உணர்ந்து மகிழ்தல் வேண்டும் என்னும் பெருங்கருணைத் திறத்தால் புறத்தே பாவனையாகக் காட்டுவதே வள்ளலார் அமைத்த சத்திய ஞான சபையின் அருட்பெருஞ்சோதி வழிபாடாகும். தோற்றமில் காலமாகத் தம்மைப் பிணித்துள்ள ஆணவமலப் பிணிப்பின் காரணமாக ஆன்ம அறிவினை மறைத்துள்ள தத்துவப் படலங்களாகிய திரைகள் ஏழெனவும், அவை நீங்கப் பெற்றால் அருட்பெருஞ் சோதியாண்டவரைத் தரிசித்துப் பிறவிப் பிணிப்பகலப் பேரின்ப வாழ்வை அடைந்து இன்புறலாம் எனவும் அறிவுறுத்துவதே வடலூர் சத்தியஞான சபையின் வழிபாட்டு முறையாகும்.

ஆன்மாவை அநாதியே பற்றியுள்ள ஆணவ மலமானது ஆன்மாவின் அறிவு, விழைவு, செயல் ஆகியவற்றை மறைத்து நிற்கும் எனவும், இறைவனது அருட் சத்தியானது மறைப்பாற்றலாய் ஆன்மாவுடன் கூடி நின்று ஆன்மாவை விட்டு ஆணவமலம் கழலும் பக்குவத்தையுண்டாக்கி, அஙங்னம் மல பரிபாகம் பெற்ற ஆன்மாக்களுக்கு மீளவும் பழைய அருட்சத்தியாய்த் தோன்றிச் சிவனுடைய திருவருளிலே கூட்டுவிக்கும் (சிவப்பிரகாசம் 30) எனவும் சைவ சித்தாந்த நூல்கள் கூறும். பெற்ற தாயானவள் பிள்ளைகளின் நோயினை நீக்குதல் வேண்டிக் கசப்புடைய மருந்தினை மறைத்துக் கொடுக்கும்போது சினமுடையவள்போல் தோன்றி நோய் நீங்கிய நிலையிற் பழைய பேரன்பினை