பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196


போற்றி அதன் துணைக்கொண்டு உலக மக்களின் துன்பத்தைத் துடைக்க உறுதி கொண்டார்.

தன்னலம் கருதாது உலக நலங்கருதித் தம் முன்னோர் கண்ட சமரச சன்மார்க்க நெறியினையே தமக்கு உறுதுணையாகக் கொண்டார்.

தமிழ் முன்னோர் கண்ட மெய்ந்நெறியினை இக்காலத்து மக்கள் நன்கு புரிந்து மேற்கொள்ளும்படி, எளிய இனிய இயல் இசைத் தமிழ் நடையில் உரையும் பாட்டுமாக எல்லார்க்கும் விளங்க விளக்கியருளினார். தாம் அறுவுறுத்தும் சன்மார்க்கமாகிய பொதுநெறி சைவ முதலான சமயங்களின் எல்லையுட் பட்டடங்கிய தன்று; எல்லாச் சமயங்களையும் கடந்து அப்பாற்பட்டது என்னும் உண்மையை உலகமக்கள் தெளிவாக உணரும்படி சமரச சன்மார்க்கம் என்ற பெயரளவில் அமையாது சமரச சுத்த சன்மார்க்கம் என அடைமொழி தந்து பெயர் விளக்கம் செய்தார். இந்நெறி என்றும் மாறாத முழுமுதற் பொருளாகிய மெய்ப் பொருளைச் சார்பாகப் பற்றி எக்காலத்தும் அழியாத பெருநெறியாகத் திகழ்வதால் இதன் கிளைகளாகிய சங்கம், சாலை, சபை ஆகிய மூன்றும், முறையே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் எனவும், சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச் சாலை எனவும், சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை எனவும் வழங்கப் பெறுவனவாயின. சன்மார்க்க நெறிக்கு வித்திட்ட சைவ சமயத்தார், முழுமுதற் கடவுளைச் 'சிவம்' என்ற பெயரால் வழங்குதல் மரபு. பொதுமறையருளிய திருவள்ளுவர், இறைவனைச் செம்பொருள் என்ற சொல்லாற் குறிப்பிடுவர். இரண்டும் ஒன்றே என்னுங் கருத்தில் 'செம்பொருளான சிவமெனலாமே' என்றார் திருமூலர். இறைவனைக் குறித்து வழங்கும் 'சிவம்' என்ற இச்சொல்