பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222


எனவரும் உமாபதி சிவனார் அறிவுரையும் இங்கு ஒப்பு நோக்கி யுணரத் தக்கனவாகும்.

எல்லாம் வல்ல முழு முதற்பொருளாகிய இறைவனை அன்பினால் நினைந்து போற்றும் மெய்யடியார்கள் சாதியின் போலித் தன்மையை உணராத மக்களால் உயர்வாகவும், தாழ்வாகவும் பேசப்படும் எந்தக் குலத்திற் பிறந்தவராயினும் அவர்களின் நெற்றியிலேயிடப்பட்ட திருநீறும் அவர்களால் பூணப் பெற்ற சிவமணி மாலையும் முதலிய திரு அடையாளங்களைக் கொண்ட திருவேடத்தினைக் காணப் பெற்றால், இதுவே இறைவனுடைய திருவுருவமாம் எனத் தெளிந்து, அவர் பிறந்த சாதி புறத்தோற்றம் முதலியவற்றை எண்ணி வெறுப்படையாமல் அவ்வடியார்களைக் கண்ட பொழுதே, இவர்கட்கு நாம் அடிமைத் தொண்டு செய்ய வேணுமென்ற விருப்புடையராய் அவர்களை உவப்புடன் நோக்கி, இங்கு நம்முன்தோன்றுமிவர், தெய்வத் தன்மையுடைய அடியார் மாற்றம் மனங்கடந்த நிலையில் உள்ள அம்முதற் பொருளே இவரையாட்கொண்ட கடவுள் என்று கூறி அடியாரையும் இறைவனையும் இரண்டுபடப் பேசுகின்ற பேதவுணர்வின் நீங்கி, இவரே நாம் வழிபடுங் கடவுள் எனத் தெளிந்த உணர்வுடையராய் அடியாரை வழி பட்டொழுகும் தொண்டர்களது தூய நெஞ்சத்தினுள்ளே கன்றாப்பூரில் புறத்தே நடுதறியாகக் காட்சியளிக்கும் இறைவனை அகத்தே கண்டு மகிழலாம் என அறிவுறுத்தும் நிலையிலமைந்தது,

எவரேனுந் தாமாக விலாடத்திட்ட
     திருநீறும் சாதனமும் கண்டா லுள்கி
உவராதே யவரவரைக் கண்டபோது
     உகந்தடிமைத் திறநினைந்தங் குவந்துநோக்கி