பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இங்குக் கூறப்பட்ட எண் வகை ஆற்றல்களும் கைவரப் பெற்றவர்களே சித்தர்களாவர். இச்சித்திகளனைத்தும் உலகத்தாரை வியக்கச் செய்யும் ஆற்றலுடையன. இறைவனருளால் எண் வகைச்சித்திகளும் கைவரப் பெற்று இவ்வுலகியல் அளவில் நின்று விடாது எல்லாம் வல்ல இறைவனுக்குரிய எண்குணங்களிலும் திளைத்த நெஞ்சத்தினராக மன்னுயிர்களின் இன்னல்களைக் களைவதே தம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு அழியா உடம்புடன் வாழ்பவர்களே சிவசித்தர் எனப் போற்றப்பெறுவர்.

உலக உயிர்கள் மும்மலப்பிணிப்பால் உறும் அல்லல்களை நீக்குதற் பொருட்டு அருளளே வாட்படையாகவும், நாதமே போர்ப்பறையாகவும், தந்நிலையில் தாழாமையாகிய மானமே பரியாகவும், நல்லறிவே வெண்குடையாகவும், திருநீறே கவசமாகவும் கொண்டு மாயப்படைகளை எதிர்க்கும் நிலையில் திருப்படை எழுச்சியினைச் செப்பவந்த திருவாதவூரடிகள், மெய்த் தொண்டு புரியும் தொண்டர்களை முன்னே செல்லும் தூசிப்படையாகவும், பத்திமை நெறியைப் பரப்பும் அடியார்களை இரு பக்கங்களிலும் சென்று பகைப் படையினை வளைக்கும் கைகோட் படையாகவும், அறிவாற்றல் பெற்ற சிவயோகிகளை நடுவே செல்லும் பேரணிப் படையாகவும், மனத் திண்மையும் செயலாற்றலும் வாய்ந்த சித்தர்களை தம்சேனை எதிரிப்படைகளால் தாக்கிப் பின்னிடாதவாறு தடுத்துப் பின்நின்று செலுத்தும் கூழைப் படையாகவும் செல்லும் படி பணிப்பது.

தொண்டர்காள் தூசி செல்வீர்
     பத்தர்காள் சூழப்போகீர்